ரஷ்யாவின் அந்த முன்னெடுப்பு... மூன்றாம் உலகப் போரை உருவாக்கும்: எச்சரிக்கும் அமைச்சர்
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு என்பது விரிவடைந்து மூன்றாம் உலகப் போரை உருவாகும் வாய்ப்புகள் இருப்பதாக உக்ரேனிய அமைச்சர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் எல்லையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆயுதங்களை குவிப்பதுடன் ராணுவத்தையும் தயார் நிலையில் வைத்துள்ளார். 2022ல் உக்ரைன் மீது படையெடுப்பை அவர் முன்னெடுக்க வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டுக்கான முன்னாள் படைவீரர்களுக்கான அமைச்சர் Yulia Laputina இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், உக்ரைன் எப்போதும் தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறது என்றார்.
ஆனால் இந்த விவகாரம் கண்டிப்பாக உக்ரைன் எல்லைகளுக்கு அப்பால் போரை உருவாக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். உக்ரைன் அமைச்சரின் இதே கருத்தையே பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனும் முன்வைத்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதல் போக்கு கண்டிப்பாக பேரழிவையே ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார். திங்களன்று ரஷ்ய ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய போரிஸ் ஜோன்சன், உக்ரைன் மீதான பிரித்தானியாவின் நிலைப்பாட்டை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் நிலை உருவானால், ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் தெளிவுப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.