அமைதிப் பேச்சுவார்த்தை ஒருபக்கம்... உக்ரைனை ட்ரோன்களால் புரட்டியெடுத்த ரஷ்யா
2022ல் முழு அளவிலான போர் தொடங்கியதில் இருந்து மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை உக்ரைன் மீது ரஷ்யா முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதலை முடுக்கிவிட்டுள்ளது
இதில் கியேவ் பகுதியில் பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன் குறைந்தது மூன்று பேர் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தரப்பு தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை துருக்கியில் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ரஷ்யா தாக்குதலை முடுக்கிவிட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி பகல் 8 மணிக்கு ரஷ்யா 273 ட்ரோன்களை ஏவியுள்ளது. முக்கியமாக மத்திய கியேவ் பகுதி மற்றும் கிழக்கில் உள்ள டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் பகுதிகளை குறிவைத்துள்ளது.
உக்ரைன் விமானப்படை வழங்கிய தரவுகளின் அடிப்படையில், இந்தப் போரில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் இதுவாகும். மட்டுமின்றி, பிப்ரவரி 23 அன்று ரஷ்யா உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, ரஷ்யா அப்போது 267 ட்ரோன்களை ஏவியது.
ஜனாதிபதி ட்ரம்ப்
ரஷ்யா - உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளில் முதல்முறையாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தையானது போர்நிறுத்தத்தை உறுதி செய்யத் தவறிவிட்டது.
மேலும், இஸ்தான்புல்லில் நடந்த 100 நிமிட பேச்சுவார்த்தையில், இரு தரப்பிலும் 1,000 போர்க் கைதிகளை விடுதலை செய்வதற்கான ஒப்பந்தம் மட்டுமே ஏற்பட்டது. இதனிடையே, திங்கட்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஆகியோருடன் பேச இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் நீடித்த ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் தலைநகர் பகுதியில் 28 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 4 வயது குழந்தை உட்பட குறைந்தது மூன்று பேர் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |