பிளேக் நோயால் மரணமடைந்த ஆய்வாளர்... ரஷ்யாவின் திடீர் முடிவால் எழுந்த சந்தேகம்
Mystery as Russia lifts quarantine: ரஷ்யா தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை நீக்கியதில் மர்மம்.
பிளேக் நோயால் ஆராய்ச்சியாளர் ஒருவர் மரணமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், ரஷ்யா திடீரென தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்துள்ளது.
தொற்றுநோய்
அக்டோபர் 2 ஆம் திகதி பெண் ஆராய்ச்சியாளர் மரணமடைந்ததை நிமோனியா பாதிப்பு என ஆதிகாரிகள் தரப்பு விளக்கமளித்துள்ள நிலையில், அவர் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டாரா இல்லையா என்பது மர்மமாகவே உள்ளது.

இந்த நிலையில், தாங்கள் ஆயிரக்கணக்கான ஆய்வகப் பரிசோதனைகளை மேற்கொண்டதாகவும், சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்; இதனை இர்குட்ஸ்க் பிராந்திய ஆளுநர் இகோர் கோப்ஸேவ் அறிவித்துள்ளார்.
நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவருக்குமான மருத்துவக் கண்காணிப்பும் நிறைவடைந்துள்ளது. தொற்றுநோய்கள் தொடர்பான எந்தவொரு உடல்நலப் பிரச்சினைகளும் கண்டறியப்படவில்லை. இர்குட்ஸ்க் மற்றும் ஷெலேகோவ் ஆகிய இடங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய்ப்பரவல் சூழல் சீராக உள்ளது என கோப்ஸேவ் தெரிவித்துள்ளார்.
மேலும், மரணமடைந்த ஆய்வாளர் தார்யா ஷிபிலோவாவின் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை, துயரத்தில் ஆழ்ந்திருந்த அவரது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவிக்கவில்லை, அல்லது தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக அவர் துத்தநாக சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்படுவாரா என்பது குறித்தும் இகோர் கோப்ஸேவ் விளக்கவில்லை.
இதனிடையே, ஷிபிலோவாவுடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கு பிளேக் நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில், இந்த அதிர்ச்சிகரமான நடவடிக்கை உலகம் முழுவதும் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரஷ்யாவின் நுகர்வோர் நல அமைச்சகம் புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் இல்லை என மறுத்துள்ளதுடன், இணையத்தில் உள்ள தகவல்கள் போலியானவை என்றும் கூறியுள்ளது.
சைபீரியா மற்றும் தூரக் கிழக்குப் பகுதிக்கான இர்குட்ஸ்க் பிளேக்-தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, உயிருள்ள பாக்டீரியாக்கள் அடங்கிய சோதனைக் குழாய் ஒன்று உடைந்ததால் தார்யா பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
உண்மை தமக்கு தெரியும்
அவரது தாயார் ஸ்வெட்லானா ஷிபிலோவாவும் ஒரு மருத்துவ நிபுணர் ஆவார்; இறப்புக்கான காரணம் போலியானது என்று அவர் கருதுகிறார்.
உண்மை என்னவென்பது தமக்கு தெரியும் என்றும், பாக்டீரியாக்கள் அடங்கிய சோதனைக் குழாய்கள் எளிதில் உடைந்துவிடக் கூடியது அல்ல என்றும், சுவற்றில் வீசினாலும் அவை உடைவதில்லை என்றார். குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததால், தங்கள் மகளின் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியவில்லை என்று ஸ்வெட்லானா முன்னதாகக் குறை கூறியிருந்தார்.

இதனிடையே, தார்யாவின் இறுச்சடங்கு தொடர்பில் மாகாண நிர்வாகம் எந்த உதவியும் செய்வதில்லை என இகோர் கோப்ஸேவ் தெரிவித்துள்ளார்.
தார்யாவுக்குத் தடுப்பூசி போடப்பட்டிருந்ததாகவும், பிளேக் உள்ளிட்ட தான் கையாண்ட ஆபத்தான நோய்த்தொற்றுகளுக்கு எதிராக அவரிடம் நோய் எதிர்ப்பு சக்தி இருந்ததாகவும் கோப்ஸேவ் கூறியுள்ளார்; இருப்பினும், அந்தத் தடுப்பூசிகள் முழுமையான பாதுகாப்பை அளிப்பவை அல்ல என்றே கூறப்படுகிறது.
தீவிர புடின் ஆதரவாளரான இகோர் கோப்ஸேவ், இந்த விவகாரம் புடின் அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட சவால் என்றும், அதை தாங்கள் கண்ணியத்துடன் எதிர்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.