ஒரே நாளில் 1690 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு: சுற்றி வளைக்கப்பட்ட உக்ரைனிய வீரர்கள்
Russia Lost 1690 soldiers in one day: ஒரே நாளில் 1690 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
ஒரே நாளில் 1690 ரஷ்ய வீரர்கள் பலி
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாட்டு இராணுவ படைகளும் முன்கள வரிசையில் சண்டையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் ஆயுதப் படையின் தலைமை பணியகம் வெளியிட்ட அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 1690 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதன் மூலம் உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இதுவரை சுமார் 1,528,970 ராணுவ வீரர்களை ரஷ்யா இழந்து இருப்பதாக உக்ரைன் வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
அத்துடன் இந்த 4 ஆண்டுகால போர் நடவடிக்கையில், இதுவரை நூற்றுக்கணக்கான பீரங்கிகள், ஆயிரக்கணக்கான வான் பாதுகாப்பு அமைப்புகள், மற்றும் டஜன் கணக்கான போர் விமானங்கள் உட்பட பல்வேறு ராணுவ தளவாடங்களை ரஷ்யா இழந்துள்ளது.
உக்ரைனை சுற்றிவளைத்த ரஷ்யா
இதற்கிடையில் கார்கிவ் நகரில் உள்ள நெஃபெடோவ்கா பகுதியில் உக்ரைன் ராணுவ வீரர்களை ரஷ்யா சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தியதாக ரஷ்யாவின் ரியா நோவோஸ்தி என்ற செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
அத்துடன் ரஷ்ய வீரர்களின் சுற்றி வளைப்பில் இருந்து உக்ரைனிய வீரர்கள் தப்பிக்க முயன்ற போது அவர்களின் பல கவச வாகனங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், டிசா கவச சண்டை வாகனங்களும், M113 கவச வாகனமும் அடங்கும் என பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.