பல நாட்கள் குண்டுவீச்சு... உக்ரைனின் கார்கிவ் போரில் தோல்வியடைந்த ரஷ்யா
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வில் பல நாட்கள் நீண்ட போருக்கு பின்னர் ரஷ்ய துருப்புகள் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, கார்கிவ் நகரில் இருந்து ரஷ்ய துருப்புகள் படிப்படியாக வெளியேறி வருவதாகவும் கூறப்படுகிறது. ரஷ்யர்கள் வடகிழக்கு நகரத்திலிருந்து பின்வாங்கி, முக்கிய விநியோக வழித்தடங்களில் கவனம் செலுத்துவதாக உக்ரைன் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
உண்மையில் கார்கிவ் போரில் உக்ரைன் வெற்றி பெற்றுள்ளது எனவும், ரஷ்ய துருப்புகளை நகருக்குள் அனுமதிக்காமல் அவர்கள் தவிர்த்துள்ளதாகவும் அமெரிக்க நிபுணர் ஒருவர் பாராட்டியுள்ளார்.
இதனிடையே, கார்கிவ் நகர மேயர் தெரிவிக்கையில், முக்கிய வடகிழக்கு நகரத்தின் ஒரு சிறிய பகுதிக்குள் மட்டுமே ரஷ்ய துருப்புக்களால் நுழைய முடிந்தது எனவும், ஆனால் நீண்ட நாட்களாக அவர்கள் அங்கு தாக்குப்பிடிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், தற்போது அவர்கள் வெளியேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, பொதுமக்களும் தங்கள் குடியிருப்புகளுக்கு திரும்பி வருவதாகவும், மின்சாரம், குடிநீர், எரிவாயு உள்ளிட்டவையை விநியோகம் செய்ய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மேயர் Ihor Terekhov தெரிவித்துள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான குடியிருப்பு வளாகங்கள் ரஷ்ய துருப்புகளால் குண்டுவீச்சுக்கு இலக்காகி சேதமடைந்துள்ளது, எதிர்காலத்தில் பெரும் புனரமைப்பு முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.