ரஷ்யாவிற்கு வந்த சோதனை - டீசலை இறக்குமதி செய்யவேண்டிய நிலைக்கு தள்ளிய உக்ரைன்
உக்ரைன் மேற்கொண்ட சமீபத்திய தாக்குதல்களால் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளது.
ரஷ்யாவின் துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக், டீசல் ஏற்றுமதியை தற்காலிகமாக தடை செய்யும் திட்டம் குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
அதேசமயம், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய எரிபொருள் இறக்குமதி செய்வது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோவில் நடைபெற்ற கூட்டத்தில், ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைன் தாக்குதல்கள் சமூகத்தை அசைத்துவிடும் முயற்சி எனக் கூறி, அரசு கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கிரிமியாவின் செவாஸ்டோபோல் நகரில், எரிபொருள் பற்றாக்குறையால் பொதுப் போக்குவரத்து, கடைகள், கஃபேக்கள் ஆகியவற்றின் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளன.
இரவு 10 மணிக்குப் பிறகு பேருந்துகள் நிறுத்தப்பட்டு, பெரிய கடைகள் மற்றும் கஃபேக்கள் இரவு 8 மணிக்கே மூடப்படுகின்றன. தெருவிளக்குகளும் குறைக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவின் பெட்ரோல் உற்பத்தி கடந்த வாரம் 25 சதவீதம் குறைந்துள்ளது. பல சுத்திகரிப்பு நிலையங்கள் பராமரிப்பு பணிகளை தாமதப்படுத்தி, சேமிப்பில் இருந்த எரிபொருளை பயன்படுத்தி வருகின்றன.
தற்போது, பிரேசில் மற்றும் துருக்கி போன்ற நாடுகள் ரஷ்யாவின் டீசலை இறக்குமதி செய்கின்றன. ஆனால், உள்நாட்டு சந்தையில் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு சலுகை திட்டங்கள் மற்றும் வரி மாற்றங்கள் குறித்து ஆலோசித்து வருகிறது.
இந்த நிலை, ரஷ்யாவின் எரிபொருள் சந்தையை மட்டுமல்ல, உலகளாவிய எண்ணெய் விலைகளையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |