ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டும் நாடு! குழப்பத்தில் உலக நாடுகள்... இந்தியாவுக்கு சிக்கல்?
தனக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளை ஒருங்கிணைக்கும் பணியில் ரஷ்யா தீவிரமாக இறங்கியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தாக்குதலை நடத்தி வருகிறது.
ரஷ்யாவின் இச்செயலை கண்டித்து பல நாடுகள் ரஷ்யா மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இது ரஷ்யாவின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமா ரஷ்யா தனக்கு ஆதரவான நாடுகளைத் திரட்டும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இதன்முக்கிய நடவடிக்கையாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பும் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம் தெரிவித்து கடிதங்களை எழுதி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக மூத்த வெளியுறவு அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில்,ஷெரீப் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து புடின் கடிதம் எழுதி இருந்தார்.
அந்த கடிதத்தில் அவர் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை ஆழப்படுத்த விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் எழுதிய கடிதத்திலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்தும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார் என்று கூறினார்.
தொடக்கக் காலத்தில் ரஷ்யாவுக்கும் பாகிஸ்தான் நாட்டிற்குமான உறவு சுமுகமாகவே இருந்தது. இருப்பினும், சமீப ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமடைந்தது. பாகிஸ்தான் அமெரிக்கா உடன் நெருக்கம் காட்டியது. இதனால் ரஷ்யா சீனாவை நோக்கி மேலும் நகர்ந்தது.
இந்தச் சூழலில் தான் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் நாட்டுடன் ரஷ்யா நெருக்கம் காட்டுவது இந்தியாவுக்குச் சிக்கலை ஏற்படுத்துவதாகவே இருக்கும் என தெரிகிறது.
மேலும் தனக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளை ரஷ்யா ஒருங்கிணைக்கும் முயற்சியை தீவிரமாக்கியுள்ளது தெள்ள தெளிவாகியுள்ளது, ரஷ்யாவின் இந்த நகர்வு உலக நாடுகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.