உக்ரைனிலிருந்து உணவு தானிய ஏற்றுமதியை மீண்டும் தடுக்க ரஷ்யா திட்டம்: ஜேர்மனி பகீர் குற்றச்சாட்டு
ரஷ்ய ஜனாதிபதி புடின், மீண்டும் தானிய ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி போர்ச்சூழலை தனக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ள முயல்வதாக ஜேர்மனி பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது.
உலகையே கலங்க வைத்த உக்ரைன் போர்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபோது, அது ஏதோ இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினை என மற்ற நாடுகள் பல எண்ணின.
ஆனால், உலக நாடுகள் பலவற்றிற்கு உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடு உக்ரைன். ஆகவே, உக்ரைனிலிருந்து தானியங்கள் ஏற்றுமதி ஆகாமல் ரஷ்யா தடுக்க, போருக்கு சம்பந்தமே இல்லாத பல நாடுகளில் விலைவாசி உயர்ந்தது, பல நாடுகள் உணவுப்பற்றாக்குறையால் தவித்தன. ஆக, உக்ரைன் போர் உலகையே கலங்கவைத்துவிட்டது.
அதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் அமைப்பும் துருக்கியும் பேச்சுவார்த்தைகள் நடத்த, உக்ரைன் துறைமுகங்களிலிருந்து உணவு தானியங்கள் ஏற்றுமதிக்கு சம்மதித்து ரஷ்யா ஒப்பந்தம் ஒன்றிற்கு ஒப்புக்கொண்டது.
ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடித்துக்கொள்ள புடின் திட்டம்
இந்நிலையில், அந்த ஒப்பந்தத்தை 60 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது, மே மாதத்தில் நடுப்பகுதியிலேயே காலாவதியாகச் செய்ய ரஷ்யா விரும்புவதாக, ஒப்பந்தத்தை மீற புடின் திட்டமிட்டுள்ளதாக, ஜேர்மனியின் வேளாண்மைத்துறை அமைச்சரான Cem Özdemir குற்றம் சாட்டியுள்ளார்.
உக்ரைன் துறைமுகங்களிலிருந்து உணவு தானியங்கள் ஏற்றுமதிக்கு அனுமதிப்பது தொடர்பில் ரஷ்யா செய்துகொண்ட ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள ஜேர்மன் வேளாண்மைத்துறை அமைச்சரான Cem Özdemir, உக்ரைன் தானியங்கள் எங்கெங்கு தேவையோ அங்கு வந்தாகவேண்டும் என்றும், அந்த தானியங்களை விற்பனை செய்வதால் கிடைக்கும் பணம் உக்ரைனுடைய வாழ்வாதாரத்துக்கு இன்றியமையானது என்றும் கூறியுள்ளார்.