போரை முடிவுக்கு கொண்டு வர தயார்: உக்ரைன், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா சம்மதம்
Russia Ready to Resume Peace Talks with Ukraine and US: போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்
அமெரிக்கா மற்றும் உக்ரைனுடன் இணைந்து போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான கொள்கை அளவிலான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
அமைதி பேச்சுவார்த்தை தொடர்பான இந்த தகவலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மூத்த ஆலோசகரான யூரி உஷாகோவ் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையே செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த முக்கிய சந்திப்புக்கு பிறகு யூரி உஷாகோவ் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைன்-ரஷ்யா-அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையானது அடுத்த மாதமே தொடங்க அதிக வாய்ப்பு இருப்பதாக யூரி உஷாகோவ் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைனும் தயாராக இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தொய்வு

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு மீண்டும் ரஷ்யாவை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வர உக்ரைனும், அதன் மேற்கத்திய நாடுகளின் கூட்டாளிகளும் தீவிரமான முயற்சி செய்து வருகின்றனர்.
ஆனால் உக்ரைனிடம் ஏவுகணை தடுப்பு அமைப்புகளின் தட்டுப்பாடு அதிகரித்து வருவதாலும், போரில் ரஷ்ய படைகளுக்கு சாதகமான சூழ்நிலை நிலவி வருவதாலும் ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தைக்கு மீண்டும் வர மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.