பழிக்குப் பழி வாங்குவோம்: பிரித்தானிய அமைச்சரின் பேச்சால் எரிச்சலடைந்த ரஷ்யா பதிலடி
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் என்றொரு பழமொழி உண்டு...
அதுபோல, ஏற்கனவே உக்ரைனை துவம்சம் செய்துவரும் ரஷ்யாவின் கவனத்தை தேவையில்லாமல் தன் பேச்சால் பிரித்தானியாவை நோக்கி திருப்பியிருக்கிறார் பிரித்தானிய அமைச்சர் ஒருவர்.
பிரித்தானிய இராணுவ அமைச்சரான James Heappey, ரஷ்ய நாட்டுக்குள்ளேயே உக்ரைன் தாக்குதல் நடத்தியது நியாயமானதுதான் என்றும், தாங்கள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கியதில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்திருந்தார்.
எதிர்பார்த்தது போலவே அவரது பேச்சால் எரிச்சலடைந்துள்ள ரஷ்யா, உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் பிரித்தானியா முதலான நேட்டோ நாடுகளின் இராணுவ தளங்கள் மீது தங்களால் தாக்குதல் நடத்த முடியும் என எச்சரித்துள்ளது.
அத்துடன், பழிக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, Kyivஇல் அமைக்கப்பட்டுள்ள, விசாவுக்கு விண்ணப்பிக்கும் மற்றும் விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்கும் மையங்களில், பிரித்தானிய அல்லது வேறு மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் இருந்தாலும், அந்த மையங்கள் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாகவும், எச்சரித்துள்ளது ரஷ்யா.
இதற்கிடையில், அமைச்சர் Heappeyயின் பேச்சு தேவையில்லாமல் பிரச்சினையைத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள பிரித்தானிய பாதுகாப்புத்துறையிலுள்ள அமைச்சரான Tobias Ellwood, அதனால், ரஷ்யா உக்ரைனுக்கு வெளியே மேற்கத்திய நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் நிலை உருவாகலாம் என எச்சரித்துள்ளார்.