கிரிமியா பாலத்தின் மீது 3வது முறையாக தாக்குதல்: போக்குவரத்து சேவைகள் தற்காலிக நிறுத்தம்
Russia’s crimean Bridge Targeted for 3rd Time: ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக கிரிமியாவில் பாலம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கிரிமியா பாலத்தின் மீது தாக்குதல்
ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா தீபகற்பத்தின் முக்கிய பாலத்தின் மீது உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அதிகாலை டெலிகிராம் பக்கத்தில் ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட கிரிமியா தலைவர் செர்கெய் அக்சியோனோவ் தெரிவித்த தகவலில், இரவில் நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குதலை தொடர்ந்து பாலத்தில் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த இரவு நேர தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், பாலத்தின் கட்டமைப்பு சேதாரங்களை நிபுணர்கள் மதிப்பிட்டு வருவதாகவும் ரஷ்ய போக்குவரத்து அமைச்சகம் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
12 மைல் நீளமுள்ள இந்த இரட்டை வளைவு கொண்ட பாலம் மீது ஏற்கனவே நடத்தப்பட்ட இரண்டு தாக்குதலில் பாலம் பலத்த சேதமடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனின் முன்கள வரிசையில் சண்டை போட்டு வரும் ரஷ்ய ராணுவ படையினருக்கான முக்கிய விநியோகப் பாதையாக இந்த கிரிமியா பாலம் திகழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.