உலகில் மிகப்பெரிய அகதிகள் பிரச்சினைக்கு வழிவகுக்கும் ரஷ்யாவின் உக்ரைன் ஊடுருவல்: எச்சரிக்கும் அமெரிக்க தூதர்
ரஷ்யா உக்ரைனை ஊடுருவினால், உலகில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அகதிகள் பிரச்சினை உருவாகும் என ஐ.நா சபைக்கான அமெரிக்க தூதர் எச்சரித்துள்ளார்.
ரஷ்ய ஊடுருவல் காரணமாக சுமார் ஐந்து மில்லியன் மக்கள் வரை இடம்பெயர வேண்டிவரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அரசு அவசர நிலை பிறப்பித்துள்ள நிலையில், ரஷ்யாவில் வாழும் மூன்று மில்லியன் உக்ரைன் நாட்டவர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இன்று அதிகாலை, உக்ரைன் தலைநகர் Kievஇல் வெடிச்சத்தமும் ஆம்புலன்ஸ்கள் சைரனை ஒலிக்கவிட்டு பறந்து செல்லும் சத்தமும் கேட்கத் துவங்கியாயிற்று.
இந்நிலையில், நியூயார்க்கில் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் ஒன்றில் பேசிய ஐ.நா சபைக்கான அமெரிக்க தூதரான Linda Thomas-Greenfield, கிழக்கு உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவுவதன் காரணமாக, ஐந்து மில்லியன் மக்கள் வரை இடம்பெயர வேண்டிய நிலை உருவாகும் என்று கூறியுள்ளார்.
ரஷ்யாவும் உக்ரைனும் உலகில் ஏற்றுமதி செய்யப்படும் கோதுமையில் 30 சதவிகிதத்தை உற்பத்தி செய்யும் நாடுகள் என்பதால், ரஷ்ய ஊடுருவல் காரணமாக, மற்ற நாடுகளில் உணவுப்பொருட்களின் விலை உயரும் என்றும், அதனால், பஞ்சம் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அதனால், லிபியா, ஏமன் மற்றும் லெபனான் போன்ற நாடுகளில் மக்கள் பசியால் வாடும் துயர நிலை உருவாகலாம் என்றார் அவர்.
இந்தப் போரால் உருவாக இருக்கும் துயரம் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு பயங்கரமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் Linda.