இரவு நேரத்தில் வட்டமிட்ட 500க்கும் மேற்பட்ட உக்ரைனிய ட்ரோன்: வேட்டையாடிய ரஷ்யா
Russia shotdown 500 ukraine drone overnight: ரஷ்யாவை குறிவைத்து உக்ரைன் இரவு நேரத்தில் 500க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்யாவை தாக்கிய உக்ரைனிய ட்ரோன்கள்
உக்ரைன் ராணுவத்தினர் இரவு நேரத்தில் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதலை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் உக்ரைன் இரவு நேரத்தில் ஏவிய 533 ட்ரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

அஸ்ட்ராகான், பெல்கோரோட், பிரையன்ஸ்க், குர்ஸ்க், லிபெட்ஸ்க், ரோஸ்டோவ், சரடோவ், துலா, உலியானோவ்ஸ்க், வோல்கோகிராட் மற்றும் வோரோனேஜ் ஆகிய பிராந்தியங்களில் இந்த ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கிரிமியா மற்றும் கருங்கடல், அசோவ் கடல் பகுதிக்கு மேலேயும் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஸ்டோவ் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் சிதறல்கள் விழுந்ததில் ரயில் பாதையின் மேல் நிலை மின் கம்பிகள் பலத்த சேதமடைந்துள்ளன.
இதன் காரணமாக சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் ரயில் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்தில் 5 பேர் வரை காயமடைந்து இருப்பதாகவும் உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.