ரஷ்யாவால் சின்னாபின்னமாக்கபடும் உக்ரைன்: பீதியை கிளப்பும் தகவல்
உக்ரைனில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை ரஷ்ய துருப்புகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய துருப்புகள் குண்டுவீச்சு மற்றும் கண்மூடித்தனமான தாக்குதல்களால் உக்ரைன் பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வருகின்றனர். இந்த நிலையில், போரில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தி வருவதாகவும், உக்ரைனில் பாஸ்பரஸ் குண்டுகளை வீசியுள்ளதாகவும் அந்த நாட்டின் அதிகாரிகள் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
திங்களன்று உக்ரைனின் கிழக்கு நகரமான கிராமடோர்ஸ்க் பகுதியில் ரஷ்ய துருப்புகள் பாஸ்பரஸ் குண்டுகளை வீசியுள்ளதாக காணொளி ஆதாரங்கள் சிக்கியுள்ளன. வெள்ளை பாஸ்பரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தவே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், ரஷ்ய துருப்புகள் பொதுமக்கள் அதிகமாக காணப்படும் பகுதியில் பயன்படுத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்யா முன்னர் சிரியாவிலும் தற்போது உக்ரைனிலும் அதை பயன்படுத்தி வருகிறது.
உக்ரைன் மீதான போர் மேலும் நீடித்துவரும் நிலையில், விளாடிமிர் புடின் நிர்வாகம் கொடூரமான தாக்குதல்களை முன்னெடுக்கலாம் எனவும், ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவும் வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது.
சனிக்கிழமையன்று கருங்கடல் மற்றும் காஸ்பியன் கடலில் உள்ள ரஷ்ய கப்பல்கள் உக்ரைன் மீது க்ரூஸ் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதுடன் கிரிமியா வான்வெளியில் இருந்து ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும் ஏவியது.
தாக்குதல்களில் ஒன்று தெற்கு உக்ரைனில் நிகோலேவ் பகுதியில் உள்ள ஒரு பெரிய எரிபொருள் சேமிப்பு கிடங்கியை அழித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, புதன்கிழமை நேட்டோ தலைவர்களுடனான சந்திப்புக்கு செல்லும் முன்னர், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுகையில், உக்ரைனில் விளாடிமிர் புடின் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவார் எனில், அது கடும் சிக்கலுக்கு வழிவகுக்கும் என எஅச்சரிக்கை விடுத்திருந்தார்.