நாடு முழுவதும் விடுக்கப்பட்ட ஏவுகணை எச்சரிக்கை... பதுங்கு குழிகளில் ஒளிந்துகொண்ட மக்கள்
ஏவுகணை அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் தாக்குதல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு பாதகமாக அமையும்
உக்ரைனின் பல பகுதிகளை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கார்கிவ், ஒடேசா மற்றும் பிற எட்டு பகுதிகளுக்கு ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது உக்ரைன் விமானப்படை உறுதி செய்துள்ளது.
கார்கிவ் மக்கள் உடனடியாக பதுங்கு குழிகளுக்கு செல்ல விமானப்படை முதலில் அறிவுறுத்தியது. ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர முன்னாள் அமெரிக்க இராணுவ தளபதி Keith Kellogg என்பவரை டொனால்டு ட்ரம்ப் அறிவித்த 24 மணி நேரத்தில் ரஷ்யா ஏவுகணைகளால் உக்ரைன் பகுதிகளை நடுங்க வைத்துள்ளது.
மேலும், ட்ரம்பின் முடிவுகள் அனைத்தும் உக்ரைனுக்கு பாதகமாக அமையும் என்றே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. ரஷ்யா முன்வைக்கும் நிபந்தனைகளை உக்ரைன் மீது கட்டாயப்படுத்தும் வாய்ப்புகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
உக்ரைன் மறுக்கும் என்றால், ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை ட்ரம்ப் நிர்வாகம் மறுக்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.
அதாவது இதுவரை ரஷ்யா கைப்பற்றியுள்ள பகுதிகளை உக்ரைன் வசம் ஒப்படைக்க தேவையில்லை அல்லது அடுத்த பல ஆண்டுகளுக்கு நேட்டோ அமைப்பில் இணையும் திட்டத்தை உக்ரைன் கைவிடுவது உள்ளிட்ட நிபந்தனைகளை ரஷ்யா முன்வைத்து வருகிறது.
தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுதம்
போரை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தின் ஒருபகுதியாக உக்ரைன் மீது கடும் அழுத்தத்தை ட்ரம்ப் நிர்வாகம் அளிக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. உண்மையில், அமைதிப் பேச்சுக்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான வழிமுறையாக இராணுவ உதவியைப் பயன்படுத்த அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்து வருபவர் Keith Kellogg.
இதனால், வலுக்கட்டாயமாக போரைத் தொடங்கிய ரஷ்யாவுக்கு ஆதரவாகவே ட்ரம்பின் முடிவுகள் இருக்கும் என்றும், ஏற்கனவே உக்ரைன் போரை ரஷ்யா துவங்கவில்லை என நம்புபவர்களில் ட்ரம்பும் ஒருவர் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், அமைதிப்பேச்சுவார்த்தை அல்லது போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதன் பின்னர் அமெரிக்கா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுதம் கொடுத்து அதன் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் Keith Kellogg தெரிவித்துள்ளார்.
ஆனால், உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உருதியாக உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |