ஜெலென்ஸ்கியின் எச்சரிக்கை... ஏவுகணை, ட்ரோன்களால் உக்ரைன் தலைநகரை சிதைத்த ரஷ்யா
உக்ரைனின் தலைநகர் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன்களால் ரஷ்யா நடத்திய மிகப்பெரிய தாக்குதலில், அந்நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நான்கு பேர் கொல்லப்பட்டதோடு, டசின் கணக்கானோர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விடுத்த எச்சரிக்கை
உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷ்யா அதிவேக ஒரெஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவக்கூடும் என உக்ரைன் விமானப்படை தனது டெலிகிராம் சேனலில் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, ரஷ்யத் தாக்குதல்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 56 பேர் காயமடைந்ததாகவும் கீவ் நகர மேயர் விட்டாலி கிளிச்கோ தெரிவித்துள்ளார். இதில் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்பொழுது, மீட்புக் குழுவினர் தீயை அணைத்தும், இடிபாடுகளை அகற்றியும் வருகின்றனர். மருத்துவக் குழுவினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அளித்து வருகின்றனர் என விட்டாலி கிளிச்கோ தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பல குடியிருப்பாளர்கள் இரவில் நகரத்தின் மெட்ரோ நிலையங்களில் தஞ்சம் புகுந்தனர். நகரில் 40க்கும் மேற்பட்ட இடங்கள் சேதமடைந்துள்ளதாக நகர இராணுவ நிர்வாகத் தலைவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் பிற பகுதிகளிலும் தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தலைநகரைச் சுற்றியுள்ள கீவ் நகரின் சுற்றுவட்டாரப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மேலும் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், ஒன்பது பேர் காயமடைந்ததாகவும் பிராந்திய ஆளுநர் மைக்கோலா கலாஷ்னிக் தெரிவித்துள்ளார்.

பதிலடி கொடுக்க புடின்
முன்னதாக, உக்ரைன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து கிடைத்த உளவுத் தகவல்களை மேற்கோள் காட்டி, ஒரெஷ்னிக் ஏவுகணையைப் பயன்படுத்தி உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா தயாராகி வருவதாக ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி சனிக்கிழமையே எச்சரித்திருந்தார்.

பல ஆயிரம் கிலோமீற்றர் தூரம் வரை செல்லக்கூடியதும், அணு ஆயுதத்தைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதுமான ஒரெஷ்னிக் ஏவுகணையைக் கொண்டு ரஷ்யா ஏற்கனவே உக்ரைன் மீது இரண்டு முறை தாக்குதல் நடத்தியுள்ளது.
ஒரெஷ்னிக் ஏவுகணையின் வேகம் ஒலியின் வேகத்தை விட 10 மடங்குக்கும் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுவதால், அதை இடைமறிப்பது சாத்தியமற்றது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார்.

வெள்ளிக்கிழமை அன்று கிழக்கு உக்ரைனின் ரஷ்ய ஆக்கிரமிப்புக்குட்பட்ட லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள மாணவர் விடுதி மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க புடின் தனது இராணுவத்திற்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஜெலென்ஸ்கி இந்த எச்சரிக்கையை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |