ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்; இந்தியாவிற்கு ரஷ்யா ஆதரவு
russia supports india for unsc permanent seat: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது.
ஐநா பாதுகாப்பு கவுன்சில்
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர்களாக தற்போது அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் உள்ளன. இந்த நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளிட்ட சிறப்புரிமைகள் உள்ளன.

இந்த பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியா நீண்ட காலமாகவே முயற்சித்து வருகிறது.
தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81-வது கூட்டத் தொடரில், இந்தியாவின் இந்த முயற்சிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
V4 நாடுகளான போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாகியா, செக் குடியரசு ஆகிய 4 நாடுகளும் இந்தியாவின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தன.

இந்தியாவிற்கு ரஷ்யா ஆதரவு
இதனையடுத்து, நிரந்தர உறுப்பினரான ரஷ்யாவும் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க ஆதரவு தெரிவித்துள்ளது.
ஐ.நாவில் பேசிய ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், "ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் கொள்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக்கும் வகையில் சீர்திருத்தம் செய்யப்படுவதை ரஷியா ஆதரிக்கிறது.
நிரந்தர உறுப்பினராக விண்ணப்பித்துள்ள இந்தியா மற்றும் பிரேசிலின் கோரிக்கையை ரஷியா ஆதரிக்கிறது.
மேற்கத்திய நாடுகளுக்கு கூடுதல் இடங்கள் அளிக்கும் வகையில் அந்த சீர்திருத்தம் இருக்கக் கூடாது.
குறிப்பாக, ராணுவமயமாக்கம், பழிவாங்கும் பாதைக்குத் திரும்பியுள்ள ஜெர்மனி, ஜப்பானுக்கு இடம் அளிக்கக் கூடாது என்பது எங்களது கொள்கை நிலைப்பாடு" என தெரிவித்துள்ளார்.