உக்ரைன் கோதுமை வயல்களை தீக்கிரையாக்கும் கொடூரம்: புடின் துருப்புகளின் வஞ்சனை அம்பலம்
உக்ரைனில் அறுவடைக்கு தயாராகியுள்ள கோதுமை வயல்களை ரஷ்ய துருப்புகள் வெடிகுண்டு வீசி நாசம் செய்து வருவதாக ஆதாரங்களுடன் ஜெலென்ஸ்கி அரசு வெளியிட்டுள்ளது.
கொழுந்துவிட்டெரியும் கோதுமை வயல்களை காப்பாற்ற உக்ரைன் வீரர்கள் தீவிரமாக போராடி வருவதும் காணொளியில் பதிவாகியுள்ளது.
உக்ரைனில் சேமிப்பு கிடங்குகளில் தேங்கியுள்ள 20 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய முடியாமல் அந்த நாடு தத்தளித்து வருகிறது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் 5 முதல் 6 மில்லியன் டன் வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்து வந்த உக்ரைன், ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் வெறும் 1.2 மில்லியன் டன் மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது.
இதனால் உலகின் பல்வேறு நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும் மிக மோசமான நிலையும் ஏற்பட்டுள்ளது. மட்டுமின்றி, தற்போது கிடங்குகளில் சேமிக்கப்பட்டுள்ள கோதுமை உள்ளிட்ட வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்ய தாமதமானால், உக்ரைனில் அறுவடைக்கு காத்திருக்கும் கோதுமையை சேமிக்க முடியாமல் போகும் எனவும், இது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்றே அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், அறுவடைக்கு தயாராக உள்ள கோதுமை வயல்களை திட்டமிட்டே ரஷ்யா அழித்து வருவதாக பகீர் தகவல் காணொளியுடன் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் என உக்ரைன் ஏர்றுமதியை நம்பியே உள்ளது. தற்போது ரஷ்ய துருப்புகளால் உக்ரைன் கோதுமை வயல்களில் வீசப்பட்டுள்ள வெடிகுண்டுகளானது 2,200C வெப்பத்தை வெளியேற்றும் எனவும், இதனால் ஏற்படும் நெருப்பானது கட்டுக்குள் கொண்டுவருவது கடினமான பணி எனவும் கூறப்படுகிறது.
தொடர்புடை வெடிகுண்டுகளை ஐக்கிய நாடுகள் மன்றம் தடை செய்துள்ளதுடன், ரஷ்யா உட்பட 123 நாடுகள் ஆதரித்தும் உள்ளன. இருப்பினும், அப்போது சிரியாவிலும், தற்போது உக்ரைனில் தடை செய்யப்பட்ட அந்த வெடிகுண்டை ரஷ்யா பயன்படுத்தியுள்ளது.
உக்ரைனில் தேங்கியுள்ள 20 மில்லியன் டன் தானியங்களை அங்கிருந்து வெளியேற்ற 400 பிரமாண்ட கப்பல்கள் தேவைப்படும் என்றே கூறப்படுகிறது.
மேலும், தானியங்களுடன் சுமார் 20 நாடுகளின் கப்பல்கள் உக்ரைன் துறைமுகங்களில் வெளியேற முடியாமல் கடந்த மூன்று மாதங்களாக காத்திருப்பதாகவும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, உக்ரைனில் இருந்து தானியங்களை வெளியேற்ற ரஷ்யா முட்டுக்கட்டையாக உள்ளது எனவும், தங்கள் மீதான பொருளாதார தடைகளை விலக்க, இந்த நெருக்கடியை ரஷ்யா பயன்படுத்த பார்க்கிறது எனவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.