உங்கள் தனிப்பட்ட விவரங்களை குறிவைத்துள்ள ரஷ்யா... புதிதாக வெளியாகியுள்ள ஆப் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
உங்கள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யுங்கள், உங்கள் டிஜிட்டல் தோற்றத்தை உங்கள் கண் முன் காட்டுகிறோம் என்று கூறும் ஆப் ஒன்று பிரபலமாகி வருகிறது.
ஆனால், அதன் பின்னணியில் ரஷ்யா இருப்பதாகவும், அது உங்கள் தனிப்பட்ட விவரங்களை குறிவைக்கலாம் என்றும் சைபர் பாதுகாப்பு நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
புதிதாக வெளியாகியுள்ள New Profile Pic app என்னும் ஆப் ஒன்றில் உங்கள் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்தால், அது டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட வித்தியாசமான உங்கள் தோற்றத்தை உங்களுக்கு உருவாக்கிக் கொடுக்கும். அதை நீங்கள் புரபைல் பிக்சர் ஆக பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த New Profile Pic appஐக் குறித்துத்தான், Jake Moore என்னும் சைபர் பாதுகாப்பு நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு ஆப்பில் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்வதால் என்ன ஆகிவிடப்போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், எந்த ஆப்பையும் நீங்கள் பதிவிறக்கம் செய்யும்போது, அது உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, சமூக ஊடக விவரங்கள் முதலான விவரங்களை சேகரிக்க சம்மதமா என்று கேட்கும்போது, அதற்கு நாம் சம்மதம்தானே தெரிவிக்கிறோம்.
அப்படி சேகரிக்கப்படும் தகவல்கள் மாஸ்கோவுக்கு அனுப்பப்படலாம் என எச்சரிக்கிறார் Jake.
காரணம், இந்த ஆப்பின் பின்னால் உள்ள Linerock Investments என்னும் நிறுவனம், ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் பின்னால், செஞ்சதுக்கத்திலிருந்து மூன்று மைல் தொலைவில், மாஸ்கோ நதியை நோக்கி அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து செயல்படுகிறது.
எப்போதுமே, இன்னொரு நாட்டில் அமைந்திருக்கும் ஒரு புதிய நிறுவனத்தின் ஆப் ஒன்று இவ்வளவு தகவல்களைக் கேட்கும்போது, அதைக் குறித்து எச்சரிக்கையாகத்தான் இருக்கவேண்டும் என்கிறார் Jake.
ஆனால், அதற்குள் பல்லாயிரக்கணக்கானோர் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்துவிட்டதோடு, அது அருமையாக இருக்கிறது என புகழ்ந்துதள்ளிக்கொண்டும் இருக்கிறார்கள் என்பது வேறு விடயம்!