உக்ரைன் அணு மின் நிலையங்களை நோக்கி ஏவுகணைகளை வீசிய ரஷ்யா: கடுமையான அச்சத்தை உருவாக்கியுள்ள விடயம்
உக்ரைனிலிருக்கும் அணு மின் நிலையங்களை நோக்கி ரஷ்யா ஏவுகணைகளை வீசியதாக வெளியாகியுள்ள தகவல் கவலையை அளிப்பதாக அமைந்துள்ளது.
1986ஆம் ஆண்டு, ஏப்ரல் 26ஆம் திகதிதான் சோவியத் யூனியனிலிருந்த செர்னோபில்லிலுள்ள அணு உலை வெடித்தது. உலகின் மிக மோசமான அந்த அணு விபத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், அதன் தாக்கம் இன்றும் நீடிக்கிறது.
இந்நிலையில், யாரைக் குறித்தும் எந்த அக்கறையுமின்றி ரஷ்யப் படைகள் உக்ரைனிலிருக்கும் அணு மின் நிலையங்களை நோக்கி ஏவுகணைகளை வீசியுள்ளன.
அந்த அணு உலைகளுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், அதன் தாக்கம் உக்ரைனை மட்டும் பாதிக்கப்போவதில்லை. ஆக, உலகிலுள்ள யாரைக் குறித்தும் புடினுக்குக் கவலையில்லை என்று கூறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி.
உக்ரைனில் அணுமின் நிலையம் அமைந்துள்ள Zaporizhzhia நகரில் இன்று ரஷ்யா வீசிய இரண்டு ஏவுகணைகள் அணு மின் நிலையத்தின் மேலாக பறந்து சென்று சற்று தொலைவில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தைத் தாக்கியுள்ளன.
மேலும், Khmelnytskyi என்ற நகரில் அமைந்துள்ள அணு மின் நிலையங்களுக்கு மேலாகவும் ஏவுகணைகளை ரஷ்யப் படையினர் வீசியுள்ளனர்.
அணு மின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தொடர்ந்து சண்டை நடந்து வரும் விடயம், அணு விபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.