அதிரடியாக நுழைந்த ரஷ்ய ராணுவம்... பொலிசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான அப்பாவி மக்கள்
ரஷ்ய துருப்புக்கள் கஜகஸ்தானுக்குள் நுழைந்துள்ள நிலையில், அங்கு டசின் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய ஆசிய நாடான காகஸ்தானில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான மக்களின் போராட்டம் மூன்றாவது நாளாக நீடித்து வருகிறது. அமைதிவழியில் துவங்கப்பட்ட இந்த போராட்டமானது தற்போது அரசுக்கு எதிரான கிளர்ச்சியாக மாறியுள்ளதுடன், மொத்த அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான Almaty சதுக்கத்தில் ராணுவத்தினருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி வியாழக்கிழமை பகலில் நடந்த இந்த மோதலில், டசின் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸ் தரப்பும் குறித்த தகவலை உறுதி செய்துள்ளது. நாடு முழுவதும் இணையச்சேவை முடக்கப்பட்டுள்ளதால் முழுமையான தகவல் வெளிவர தாமதமாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், உள்ளூர் ஊடகன்கள் வெளியிட்டுள்ள தகவலில் 1000 பேர்கள் வரையில் காயம்பட்டிருக்கலாம் எனவும் 400 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 62 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் உதவியை நாடியுள்ள ஜனாதிபதி Kassym-Jomart Tokayev போராட்டக்காரர்களின் வன்முறையை ஒடுக்க கடுமையாக நடந்துகொள்ளவும் தயக்கம் காட்டுவதில்லை என அறிவித்துள்ளார்.
இதுவரை பொலிசார் மற்றும் தேசிய காவல்படை உட்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளது தொடர்பில் தகவல் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.
1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து கஜகஸ்தானில் ஒரே கட்சி ஆட்சி செய்து வருகிறது. மட்டுமின்றி பெரும்பாலான தேர்தல்களில் 100% வாக்குகள் பெற்று ஆட்சி அமைத்து வருகிறது.
எண்ணெய் வளம் மிகுந்த கஜகஸ்தானில் இப்போதும் சீனா மற்றும் ரஷ்ய எல்லையில் வசிக்கும் மக்கள் ஏழ்மை நிலையிலேயே உள்ளனர். எரிபொருள் விலை சமீப நாட்களாக உச்சம் தொட்ட நிலையில், ஞாயிறன்று Zhanaozen நகரில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.
Zhanaozen பகுதியில் உள்ள தொழிலாளர்கள் 2011ல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது பொலிசாரின் துக்காக்கி குண்டுகளுக்கு 15 பேர் பலியானார்கள். அப்போதிருந்தே அரசுக்கு எதிரான போக்கு இப்பகுதியில் அதிகமாக காணப்பட்டு வருகிறது.
Zhanaozen பகுதியில் தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டம் தற்போது நாடு முழுவதும் வியாபித்துள்ளதுடன், அரசான்கம் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையாக வலுப்பெற்றுள்ளது.