ரஷ்யாவின் இரத்தவெறி... ஐரோப்பிய ஒன்றியத்தில் தஞ்சமடைந்த இரு நாடுகள்
ரஷ்ய படையெடுப்புக்கு பயந்து இரு முன்னாள் சோவியத் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விண்ணப்பம் செய்துள்ளன.
உக்ரைன் நாட்டை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்ய துருப்புகள் கண்மூடித்தனமாக தாக்குதல் முன்னெடுத்து வருகிறது. 8 நாட்கள் கடந்துள்ள நிலையில் ரஷ்ய தரப்பில் 9,000 வீரர்கள் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என உக்ரைன் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா முன்னெடுத்து வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷ்ய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் ரஷ்ய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், உக்ரைன் சரணடைய நேரிட்டால், எல்லையில் அமைந்துள்ள முன்னாள் சோவியத் நாடுகள் மீது ரஷ்ய போர் தொடுக்கலாம் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.
மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அமைப்பில் சேராத முன்னாள் சோவியத் நாடுகள் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என நிபுணர்கள் தரப்பு அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதில், ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள ஜார்ஜியா மற்றும் உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள மால்டோவா ஆகிய இரு முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளும் ரஷ்யாவின் இரத்தவெறிக்கு இலக்காகலாம் என்ற என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதனையடுத்து, ஜார்ஜியா மற்றும் மால்டோவா ஆகிய இரு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முறைப்படி விண்ணப்பித்துள்ளன.
ஜார்ஜியா மற்றும் மால்டோவா நாடுகளை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்துக்கொள்வதால் இந்த இரு நாடுகளுக்கும் ரஷ்யாவின் படையெடுப்பில் இருந்து குறைந்தபட்ச பாதுகாப்பு கிடைக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.