தொடங்கியது ரஷ்யா-உக்ரைன் போர்! இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? நிபுணர்கள் கடும் எச்சரிக்கை
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடக்கும் போரில் இந்தியாவின் விலைவாசி உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பல வருடங்களாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டு வருகின்றது. அதோடு தற்போது உக்ரைன் நேடா படைகளோடு இணைய முடிவு செய்துள்ள நிலையில் இதை பொறுக்காத ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு தயாராகி இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் இன்று காலை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளதையடுத்து இரு நாடுகளிடையே போர் வெடித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் ரஷ்யா - உக்ரைன் போர் மூலம் இந்திய மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ரஷ்யா முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் ரஷ்யா- உக்ரைன் பதற்றம் காரணமாக பெட்ரோலிய பொருட்களின் விலை கிடுகிடுவென சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 96.7 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் விலை உயர்வால் எல்பிஜி மற்றும் மண்ணெண்ணெய் மீதான மானியமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே நிலவும் பிரச்சனை நீடித்தால் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
அதுபோல கோதுமை விலையும் உயரலாம் எனக் கூறப்படுகிறது. ரஷ்யா உலகின் முதன்மையான கோதுமை ஏற்றுமதியாளராக உள்ளது. உக்ரைன் கோதுமை ஏற்றுமதியில் நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருங்கடல் பகுதியில் இருந்து தானியங்கள் வருவதில் தடங்கல் ஏற்பட்டால் அது விலைவாசி மற்றும் எரிபொருள் உணவுப் பணவீக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.