உக்ரைனில் அப்பாவி மக்களை கொன்று குவித்த ரஷ்யா: ஜேர்மனி பதிலடி
உக்ரைனின் புச்சா நகரத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை தெருக்களில் கொன்று வீசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 40 ரஷ்ய தூதர்களை நாட்டைவிட்டு வெளியேற்றியது ஜேர்மனி.
உக்ரைன் தலைநகர் கீவைச் சுற்றியுள்ள நகரங்களில் இருந்து ரஷ்ய துருப்புக்கள் இருந்து பின்வாங்கிய பிறகு, அப்பகுதிகளில் 410 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 300 பேர் புச்சா நகரத்தில் மட்டும் கொல்லப்பட்டுள்ளதாகவும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்நகரில் நேற்று 57 உடல்கள் கொண்ட பாரிய புதைகுழி கண்டெடுக்கப்பட்டது. மேலும், அங்கு இறந்தவர்களில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் மற்றும் துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட குழந்தைகள் அடங்குவர் என உக்ரைன் தெரிவித்தது.
ரஷ்யர்கள் சூறையாடி விட்டுச்சென்ற நகரம்: கோரமான காட்சிகளை பார்த்து கண்கலங்கிய ஜெலென்ஸ்கி
ரஷ்ய படை வீரர்களின் இந்த மிருகத்தனமான செயலுக்கு அமெரிக்க உள்ளிட்டஉலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், ரஷ்யா மீது கூடுதலாக தடைகள் விதிக்க முன்வந்துள்ளனர்.
அந்த வகையில், உக்ரைனில் பெண்கள், குழந்தைகள் என பொது மக்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த்துள்ள ஜேர்மனி, ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நேற்று 40 ரஷ்ய தூதர்களை நாட்டைவிட்டு ஜேர்மனி வெளியேற்றியது.
மேலும், ஐரோப்பிய கூட்டு நாடுகளுடன் ஒன்றிணைந்து ரஷ்யாவுக்கு எதிராக கூடுதல் நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக ஜேர்மனி எச்சரித்துள்ளது.
கடந்த 14 ஆண்டுகளாக உக்ரேனியர்களின் மரணத்திற்கு மறைமுகமாக துணைபோயிருந்ததற்காக ஜேர்மனி மற்றும் பிரான்ஸை உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடுமையாக சாடிய பின்னர் இந்த நடவடிக்கையை ஜேர்மனி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.