பறக்க தடை விதிக்கப்பட்ட மண்டலம் என்பது என்ன? உக்ரைனின் கோரிக்கையை மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏற்க மறுப்பது ஏன்?
போலந்தில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனிடம், நீங்கள் ஏன் உக்ரைனை பறக்க தடைவிதிக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க தயங்குகிறீர்கள் என உக்ரைனை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியதில் இருந்து, பறக்கும் தடை மண்டலம் குறித்து பல கேள்விகள் பொதுமக்கள் இடையே எழுந்துவருகின்றனர்.
இந்தநிலையில், பறக்க தடை விதிக்கப்பட்ட மண்டலம் என்பது என்ன? பறக்க தடை விதிக்கப்பட்ட மண்டலத்தை மேற்கு நாடுகள் விதிக்க மறுப்பது ஏன்? மற்றும் இதற்கு முன்பு பறக்க தடை விதிக்கப்பட்ட மண்டலம் எங்கு போடப்பட்டது என்பது பற்றிய விளக்கங்களை இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பறக்க தடை விதிக்கப்பட்ட மண்டலம் (No Fly Zone):
பறக்க தடை விதிக்கப்பட்ட மண்டலம் என்பது குறிப்பிட்ட பகுதியில் உள்ள வான்பரப்பிற்குள், எந்தவொரு பிற வான் பறக்கும் வாகனங்களும் பறக்க கூடாது என தடைவிதிக்கும் நடைமுறையாகும்.
பெரும்பாலும் இந்த பறக்க தடை விதிக்கப்பட்ட மண்டலம் மூலம் அரச குடியிருப்புகள், மற்றும் மிகவும் பாதுகாக்கப்பட்ட அரசாங்க பகுதிகள் ஆகியவற்றின் வான்பரப்புக்கள் பாதுகாக்கப்படும்.
ராணுவ நடைமுறையில் பறக்க தடை விதிக்கப்பட்ட மண்டலம் என்பது, ராணுவத்திற்கு சொந்தமான, அல்லது ராணுவத்தால் பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்ட வான்பகுதிகளுக்குள் குறிப்பிட்ட ராணுவ விமானங்களை தவிர பிற வான் பறக்கும் வாகனங்கள் மற்றும் தொழில்நூட்பங்கள் என அனைத்தும் பறக்க தடை விதிப்பதாகும்.
இந்த பறக்க தடை விதிக்கப்பட்ட மண்டலத்தை ஒருபகுதியில் ராணுவம் அமல்படுத்தி இருந்தால் அப்பகுதிக்குள், எந்தவொரு விமானங்களும் உள்நுழைய முடியாது.
அவ்வாறு ஏதேனும் வான் பறக்கும் சாதனங்கள் உள்நுழைந்தால் அவை உடனடியாக சுட்டு வீழ்த்தப்படும். மேலும் இதன் மூலம் அப்பகுதியின் கண்காணிப்பையும் ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியும்.
பறக்க தடை விதிக்கப்பட்ட மண்டலத்தை மேற்கு நாடுகள் விதிக்க மறுப்பது ஏன்?
இந்த பறக்க தடை விதிக்கப்பட்ட மண்டல பகுதிகளை உக்ரைனில் அமுல்படுத்தினால் அங்கு நேட்டோ பாதுகாப்பு படை நேரடியாக ரஷ்ய படைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால் இதனை மேற்கு நாடுகள் மறுத்து வருகின்றனர்.
அவ்வாறு உக்ரைனில் பறக்க தடை விதிக்கப்பட்ட மண்டலத்தை அமல்ப்படுத்த பட்டால் உக்ரைன் வான் பரப்பில் பறக்கும் ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்த நேட்டோ (NATO) படை வீரர்கள் உக்ரைனுக்குள் நுழைய வேண்டியது இருக்கும்.
இதனால் இந்த போரானது ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என கருதி மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
மேலும் இந்த போரை முன்னகர்த்தி செல்லும் ரஷ்ய அதிபர் புதின் அணுஆயுத சிறப்பு படைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க ஆணையிட்டு இருப்பது, அணுஆயுத மூன்றாம் உலக போரை தொடங்கிவிடும் அச்சத்தையும் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், உக்ரைனுக்குள் தரைவழி போர் அல்லது வான்வழி போர் என எந்த ஒரு வடிவிலும் நேட்டோ படைகள் ஈடுபடாது என நேட்டோ அமைப்பின் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்யும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கு முன் பறக்க தடை விதிக்கப்பட்ட மண்டலம் விதிக்கப்பட்ட பகுதிகள்:
1991ல் நடைபெற்ற gulf போரில் ஈராக்கின் இரண்டு பகுதிகளில் அமெரிக்கா இந்த பறக்க தடை விதிக்கப்பட்ட மண்டலத்தை பிறப்பித்தது.
அதன் பிறகு 1992ல் balkans முரண்பாட்டின் பொது ஐக்கிய நாடுகள் போஸ்னியன் பகுதியில் இந்த பறக்க தடை விதிக்கப்பட்ட மண்டலத்தை விதித்தது.
2011ல் ஐக்கிய நாடுகளின் ஒப்புதலோடு போஸ்னியன் மற்றும் லிபியா ஆகிய இருபகுதிகளில் நேட்டோ அமைப்பு இந்தபறக்க தடை விதிக்கப்பட்ட மண்டலத்தை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.