உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள ராணுவம்: புதிய செயற்கைகோள் புகைப்படத்தால் அதிர்ச்சி
ரஷ்யா, உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவிவரும் சூழலில், தற்போது வெளியாகியுள்ள செயற்கைகோள் புகைப்படங்கள் ரஷ்யாவின் ராணுவ தளவாடங்களின் வரிசை அமைப்பை உலகிற்கு வெளிக்காட்டியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள இந்த போர் பதற்றம், உலக நாடுகளை அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. முதலில் ரஷ்யா உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பதற்றமாக ஆரம்பித்து, தற்போது இது மூன்றாம் உலகப்போருக்கு வித்திட்டு விடுமோ என்ற பயத்தை உலக நாடுகளுக்கு ஏற்படுத்திவிட்டது.
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் ஆதரவு தெரிவிக்கவே, ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதின், சீனா ஜனாதிபதி ஜிங் பிங்கை காணொலி வாயிலாக சந்தித்து பேசினார். இது பல்வேறு விவாதங்களுக்கும் கணிப்புகளுக்கும் வித்திட்டாலும் இது சாதாரண ராஜ்ய ரிதியான சந்திப்பு தான் என ரஷ்யா தெரிவித்தது.
மேலும் உக்ரைன் மேல் ரஷ்யாவிற்கு போர்தொடுக்கும் எண்ணம் இல்லை எனவும், ஆனால் உக்ரைனை நேட்டோ நாடுகளுடன் இணைத்தால் அது உலக அமைதியை குலைக்கும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும் அதில் ரஷ்யா எதிர்பார்க்கும் வாக்குறுதிகளை நேட்டோ நாடுகள் வழங்க மறுத்து வருகிறது.
இந்த நிலையில் ரஷ்யாவின் crimea பகுதிகளில் உள்ள ராணுவ தளவாடங்களின் வரிசை அமைப்பை உலகிற்கு காட்டும் விதமாக பிப்ரவரி 1ம் திகதி எடுக்கப்பட்ட செயற்கைகோள் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் ராணுவ வீரர்களின் முகாம் அமைப்பு, ராணுவ தளவாடங்கள் எண்ணிக்கை மற்றும் அவைகளின் வரிசை அமைப்பு போன்றவை இந்த செயற்கைகோள் புகைப்படம் துல்லியமாக காட்டுகிறது.





