தீவிரமடையும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்: போர் நிறுத்த முயற்சிகளை கைவிடுமா அமெரிக்கா?
உக்ரைன் மீது ரஷ்யா புதிய ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்து இருப்பது போர் மோதலை தீவிரப்படுத்தியுள்ளது.
ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
உக்ரைன் மீது ரஷ்ய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் சரமாரியாகப் பாய்ந்ததில் பலர் காயமடைந்ததாக கீவ் தெரிவித்துள்ளது.
இரவு நடந்த தாக்குதலில் ரஷ்யா குறைந்தது ஆறு ஏவுகணைகள் மற்றும் ஏராளமான ஆளில்லா விமானங்களை உக்ரைன் மீது ஏவியது.
கிழக்கு பிராந்தியங்களான கார்கிவ் மற்றும் சுமி ஆகிய இடங்களில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், மேலும் 70 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறையும் அமெரிக்காவின் பொறுமை
தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான தனது அணுகுமுறையில் அமெரிக்கா மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சமிக்ஞை செய்துள்ளது.
விரைவான முன்னேற்றம் எட்டப்படவில்லை என்றால், அத்தகைய முயற்சிகளைக் கைவிடவும் அது பரிந்துரைத்துள்ளது.
வாஷிங்டனுக்கும் மாஸ்கோவுக்கும் இடையே பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் ரஷ்யாவிடமிருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை இதுவரைப் பெறவில்லை.
உக்ரைனின் தற்போதைய நிலை குறித்து பாரிஸில் ஐரோப்பிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வாஷிங்டனில் பொறுமை குறைந்து வருவதைக் சுட்டிக்காட்டினார்.
அதில், "குறுகிய காலத்தில் போர் நிறுத்தம் சாத்தியமா என்பதை அமெரிக்கா விரைவில் தீர்மானிக்க வேண்டும்" என்று கூறினார். மேலும் அவர், "ஏனென்றால் அது இல்லையென்றால், நாங்கள் அடுத்த கட்டத்திற்குச் செல்வோம் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.
ஜெலென்ஸ்கி கண்டனம்
ஈஸ்டர் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு நடந்த இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடுமையான கண்டனம் தெரிவித்தார்.
டெலிகிராமில் அவர் வெளியிட்ட செய்தியில், "இதுதான் ரஷ்யா புனித வெள்ளிக்கிழமையை ஆரம்பித்த விதம் - பாலிஸ்டிக் ஏவுகணைகள், கப்பல் ஏவுகணைகள், ஷாஹெட் ட்ரோன்கள் மூலம். இது எங்கள் மக்களையும் நகரங்களையும் கேலி செய்வது போன்றது" என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |