அது நடந்தால்... மொத்த ஆயுதங்களையும் ரஷ்யா பயன்படுத்தும்: புடின் பகிரங்க மிரட்டல்
மேற்கத்திய நாடுகளில் இருந்து உக்ரைன் அணு ஆயுதங்களைக் கைப்பற்றினால், ரஷ்யாவின் மொத்த ஆயுதங்களையும் உக்ரைனுக்கு எதிராக பயன்படுத்துவோம் என ஜனாதிபதி விளாடிமிர் புடின் மிரட்டல் விடுத்துள்ளார்.
அணு ஆயுதங்களை வழங்கலாம்
கடந்த வாரம் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதவியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு உக்ரைனுக்கு அணு ஆயுதங்களை வழங்கலாம் என்று சில மேற்கத்திய நாடுகளின் மூத்த அதிகாரிகள் பரிந்துரைத்ததாக குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையிலேயே ரஷ்ய ஜனாதிபதி புடின், உக்ரைனுக்கு எதிராக பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். கஜகஸ்தானின் அஸ்தானாவில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய புடின், நாம் தற்போது போரிட்டுவரும் ஒரு நாடு அணு ஆயுதங்களைப் பெறும் என்றால், நாம் நமது மொத்த ஆயுதங்களையும் அந்த நாட்டிற்கு எதிராக பயன்படுத்துவதுதான் முறை என்றார்.
பேரழிவை ஏற்படுத்தக் கூடிய அனைத்தையும் பயன்படுத்த ரஷ்யா தயார் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால், அவர்களின் அனைத்து நகர்வுகளையும் ரஷ்யா கண்காணித்து வருவதால், அப்படியான முடிவை எட்ட ரஷ்யா ஒருபோதும் அனுமதிக்காது என்றும் புடின் தெரிவித்துள்ளார்.
ஏதேனும் ஒரு நாடு உத்தியோகப்பூர்வமாக அணு ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கும் என்றால், அவர்கள் செய்துள்ள அனைத்துப் பரவல் தடை உறுதிமொழிகளையும் மீறுவதாக அர்த்தம் என்றார்.
பாதுகாப்புக்கு உத்தரவாதம்
தற்போதைய சூழ்நிலையில், உக்ரைனால் அணு ஆயுதம் தயாரிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது. ஆனால் அவர்களால் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஒரு குண்டை உருவாக்க முடியும் என நம்புவதாக புடின் குறிப்பிட்டுள்ளார்.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், உரிய பதிலடி அளிக்க ரஷ்யா தயாராக உள்ளது என்றார். 1991ல் சோவியத் ஒன்றியம் உடைந்தபோது உக்ரைன் அணு ஆயுதங்களை தங்கள் வசம் வைத்துக் கொண்டது.
ஆனால் 1994ல் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் உக்ரைன் அணு ஆயுதங்களை மொத்தமாக கைவிட்டது. பதிலுக்கு ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உக்ரைனின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தனர்.
ஆனால் அப்படியான முடிவு உக்ரைனின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக முடிந்தது என்று ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தொடர்ந்து புகார் தெரிவித்து வந்துள்ளார்.
இந்த ஒரு காரணத்தால், தங்களை நேட்டோ அமைப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்து வந்துள்ளார். ஆனால், உக்ரைனின் இந்த நேட்டோ கோரிக்கையை ரஷ்யா கடுமையாக எதிர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |