இதுவரை உக்ரைனில் பயன்படுத்தாத ஆயுதம்: பாதுகாப்பு செய்தித்தொடர்பாளர் பகீர் தகவல்!
உக்ரைனின் மரியுபோல் நகரில் ரஷ்யா இதுவரை பயன்படுத்தாத நீண்ட தூர குண்டுவீச்சு ஏவுகணைகளை பயன்படுத்தி இருப்பதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒலெக்சாண்டர் மோட்டுஸ்யானிக் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைளை தொடங்கி 50 நாள்களை கடந்து இருக்கும் நிலையில், ரஷ்யா தனது பெரும்பாலான படைகளை உக்ரைன் கிழக்கு பகுதிகளை நோக்கி திசைதிருப்பி இருந்தது.
இதற்கிடையே ரஷ்யாவின் மிகப் பயங்கரமான மற்றும் ஏவுகணை தாங்கிய போர்க்கப்பலான மாஸ்க்வா-வை உக்ரைன் ராணுவம் 2 நெப்டியூன் எதிர்ப்பு ஏவுகணைகளால் அழித்துவிட்டதாக தெரிவித்தது.
ஆனால் போர்க்கப்பலில் இருந்த வெடிமருந்து வெடித்ததில் தான் கப்பல் சேதமடைந்ததாக ரஷ்யா தெரிவித்து இருந்தது.
இந்தநிலையில், சேதமடைந்த கப்பலை துறைமுகத்திற்கு இழுத்து செல்லும் போது கடலில் ஏற்பட்ட சீற்றத்தால் மிகப் பயங்கரமான போர்க்கப்பலான மஸ்க்வா-வை ரஷ்யா இழந்துள்ளது.
மாஸ்க்வா போர்க்கப்பலை ரஷ்யா இழந்ததற்கு இதுவரை சரியான காரணங்கள் தெரியவராத நிலையில், சில நாள்களாக உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் துறைமுக நகரான மரியுபோலில் தாக்குதல் நடத்தாமல் இருந்த ரஷ்யா தற்போது மீண்டும் தனது தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒலெக்சாண்டர் மோட்டுஸ்யானிக், உக்ரைனில் ரஷ்யா போரை தொடங்கியதில் இருந்து இதுவரை பயன்படுத்தாத மிகப் பயங்கரமான மற்றும் நீண்ட தூர குண்டுவீச்சு ஏவுகணைகளை பயன்படுத்தி மரியுபோலை நகரை தாக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது ரஷ்யா ராணுவம் உக்ரைனின் ரூபிஸ்னே, போபாஸ்னா மற்றும் மரியுபோல் ஆகிய நகரங்களை கைப்பற்றும் முனைப்பில் இறங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.