கொடிய தாக்குதலுக்கு வடகொரிய ஏவுகணைகளைப் பயன்படுத்திய ரஷ்யா: ஜெலென்ஸ்கி வெளிப்படை
உக்ரைன் தலைநகர் கெய்வ் மீதான கொடிய தாக்குதலில் விளாடிமிர் புடினின் படைகள் வட கொரிய ஏவுகணையைப் பயன்படுத்தியதாக ஜெலென்ஸ்கி வெளிப்படுத்தியுள்ளார்.
வட கொரியாவில் தயாரிக்கப்பட்ட
குறித்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 12 என அதிகரித்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 100 கடந்துள்ளதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நடத்திய மிகக் கொடூரமான தாக்குதலில், இரவு முழுவதும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்ட தகவலில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்துள்ள ஜனாதிபதி ஜெலென்ஸ்கி,
முதற்கட்ட தகவல்களின்படி, ரஷ்யர்கள் வட கொரியாவில் தயாரிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தினர் என்றும் உக்ரைன் சிறப்பு சேவைகள் அனைத்து விவரங்களையும் சரிபார்த்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா தொடர்ந்து ஏவுகணைகள், பீரங்கிகள்போன்ற வடகொரிய ஆயுதங்களைப் பயன்படுத்தி வருகிறது. இதனால் போர்க்களத்திற்கு தேவையான ஆயுதங்களை வடகொரியா மேம்படுத்த வாய்ப்பாக அமையும்.
இதனிடையே, உக்ரைன் மீதான தாக்குதல் குறித்து கடுமையாக விமர்சித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தாம் ரஷ்யாவின் இந்த நடவடிக்கையில் மகிழ்ச்சிகொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார். இது தேவையற்றது மட்டுமின்றி தவறான நேரத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
போதும் விளாடிமிர் நிறுத்துங்கள்
வாரத்திற்கு 5,000 வீரர்கள் கொல்லப்படுவதாக குறிப்பிட்ட ட்ரம்ப், போதும் விளாடிமிர் நிறுத்துங்கள் என்றும் கோரிக்கை விடுத்தார். அமைதி ஒப்பந்தம் முன்னெடுக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவேன் என மார்தட்டி வந்த ட்ரம்புக்கு, இந்த விவகாரத்தில் இதுவரையான நகர்வுகள் அனைத்தும் கடும் ஏமாற்றத்தை அளிக்க, புடின் மீதான ட்ரம்பின் விரக்தி நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது.
இதனிடையே, அமெரிக்கா முன்வைக்கும் சாத்தியமற்ற ஒப்பந்தத்தை உக்ரைன் ஏற்கும் வகையில் அழுத்தம் ஒன்றை ஏற்படுத்தவே ரஷ்யா கொடுமையான இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்கா முன்மொழிந்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை 44 நாட்கள் முன்னரே உக்ரைன் ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் ரஷ்யா தொடர்ந்தும் தாக்குதலை முன்னெடுத்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கிரிமியா விவகாரத்தில் உக்ரைன் விட்டுத்தருவதாக இல்லை என்றும், ட்ரம்புக்கும் அது புரிந்திருக்கும் என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |