55-வது நாள்: உக்ரைன் போரின் சமீபத்திய முக்கிய தகவல்கள்
ரஷ்யா உக்ரைன் போர் இன்று 55-வது நாளை எட்டியுள்ளது. ரஷ்ய இராணுவ வீரர்கள் உக்ரைன் நகரங்களில் உள்ள பொதுமக்களை கடத்தி வைத்து சித்திரவதை செய்வதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. இருப்பினும் 'இறுதி வரை போராடுவோம்' என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதியளித்துள்ளார்.
சபோரிஜியாவில் ரஷ்யா 155 பொதுமக்களைக் கடத்தியதாக உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர்களில் 86 பேர் விடுவிக்கப்பட்டனர் என்றும், 69 பேர் இன்னும் ரஷ்யாவின் பிடியில் உள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.
உக்ரைன் போரின் சமீபத்திய 10 முக்கிய புதுப்பிப்புகள்
1. தென்கிழக்கு உக்ரேனிய துறைமுக நகரமான மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலைக்கு அடியில் குறைந்தபட்சம் 1,000 பொதுமக்கள் நிலத்தடி தங்குமிடங்களில் மறைந்துள்ளனர். அந்நகரத்தில் உள்ள உக்ரேனியரின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சாலை மீது ரஷ்யா கனரக குண்டுகளை வீசிக்கொண்டிருந்தது. இவர்களுக்கு மனிதாபிமான நடைபாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
2. ரஷ்யாவுக்கு சமித்திய அடியாக மற்றொரு மூத்த ரஷ்ய தளபதி கேப்டன் அலெக்சாண்டர் சிர்வா கொல்லப்பட்டார். அவர் கருங்கடல் கடற்படையின் ஒரு பகுதியான சீசர் குனிகோவ் தரையிறங்கும் கப்பலில் மூத்த அதிகாரியாக இருந்தார், அவர் உக்ரேனிய துறைமுகமான பெர்டியான்ஸ்கில் இறந்ததாக கூறப்படுகிறது.
3. உக்ரைனின் இர்பின் நகரில் 269 பேரின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவர்கள் அனைவரும் ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்கள் ஆவர். மேலும் பலரை காணவில்லை என கூறப்படுகிறது.
4. பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார மற்றும் அரசியல் தடைகளை விதித்துள்ளன. ஆனால் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிப்பது மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும், ரஷ்யா பாதிக்கப்படவில்லை என அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
5. உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy தனது அறிவிப்புகளில், "ரஷ்ய வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மக்களை சித்திரவதை செய்து கடத்துகிறார்கள். இருப்பினும் நாங்கள் சரணடைய விரும்பவில்லை" என்று கூறியுள்ளார்.
6. உக்ரைன் நகரங்களைத் தொடர்ந்து தாக்கிவரும் ரஷ்யப் படைகளுக்கு உதவ சில சிரியப் போராளிகள் அடுத்த கட்டப் போரில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர். சிரிய பிரிகேடியர் ஜெனரல் சுஹைல் அல்-ஹசனுக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான போராளிகள் ரஷ்ய துருப்புக்கள் சார்பாக உக்ரைனில் சண்டையிட தயாராக உள்ளனர்.
7. ஐரோப்பிய ஒன்றியம் (EU) ரஷ்ய படையெடுப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக மனிதாபிமான நிதியில் கூடுதலாக 50 மில்லியன் யூரோக்களை ஒதுக்குவதாக ஐரோப்பிய ஆணையம் அறிவித்துள்ளது. இதில் உக்ரைனில் மனிதாபிமான திட்டங்களுக்காக 45 மில்லியன் யூரோக்கள் மற்றும் மால்டோவாவிற்கு 5 மில்லியன் யூரோக்கள் அடங்கும்.
8. உக்ரைனில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யா மொத்தம் 315 இலக்குகளை தாக்கியுள்ளது. இந்த தாக்குதல்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி உக்ரைனின் நகர்வுக்கு ரஷ்யாவின் பதில் என்று நம்பப்படுகிறது.
9. உக்ரைனின் ரஷ்ய மொழி பேசும் கிழக்கு தொழில்துறை பகுதியான டான்பாஸில், ரஷ்யா ஒரு பெரிய தரை தாக்குதலை திட்டமிட்டுள்ளதாகவும். உக்ரைனின் தடுக்கும் திறனைக் குறைக்க உக்ரைனில் ஆயுத தொழிற்சாலைகள், ரயில்வே மற்றும் பிற உள்கட்டமைப்புகளை குறிவைப்பதாக இராணுவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
10. சமீபத்திய தகவலின்படி, திங்களன்று, பல ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கு உக்ரேனிய நகரமான லிவிவ் மீது தாக்கியது. இந்த குண்டுவெடிப்புகளில் குறைந்தது 7 பேர் இறந்தனர், பலர் காயமடைந்தனர்.