ட்ரோன் படைகளில் சேர மாணவர்களுக்கு அழுத்தம்? ரஷ்ய இராணுவம் அளித்த விளக்கம்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு ட்ரோன் படைகளில் சேர அழுத்தம் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுவதை ரஷ்ய இராணுவம் மறுத்துள்ளது.
அதிக ஊதியம் தருவதாக
2022யில் நடந்த முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு, அதிக ஊதியம் தருவதாக ரஷ்யா வாக்குறுதியளித்து பாரிய இராணுவ ஆட்சேர்ப்பு நடவடிக்கை தொடங்கியதாக கூறப்பட்டது.

குறிப்பாக, மாணவர்களை குறிவைக்கும் முயற்சிகள் இந்த ஆண்டு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று, ரஷ்யர்கள் கட்டாய இராணுவ சேவையைத் தவிர்க்க உதவும் Idite Lesom ("Get Lost") என்ற தன்னார்வ அமைப்பு, மார்ச் மாதம் 'தி மாஸ்கோ டைம்ஸ்' பத்திரிகையிடம் தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து, ரஷ்யாவின் ட்ரோன் படைகளில் சேர பல்கலைக்கழக மாணவர்கள் மீது அழுத்தம் கொடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், அதனை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது. அதிகாரிகள் அடங்கிய கூட்டம் ஒன்றில் பேசிய துணை பாதுகாப்பு அமைச்சர் விக்டர் கோரெமிகின், படையில் சேர்வது என்பது விருப்பத்தின் பேரிலேயே நடைபெறும் என்றும், ட்ரோன் படையில் சேருபவர்களின் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் இல்லாமல் அவர்களை மற்ற இராணுவப் பிரிவுகளுக்கு மாற்றுவதற்கு தளபதிகளுக்குத் திட்டவட்டமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
கட்டாயப்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை
மேலும் அவர், "உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பைக் குறிக்கும் அதிகாரப்பூர்வப் பெயரான சிறப்பு இராணுவ நடவடிக்கையில் பங்கேற்க மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. ட்ரோன் பிரிவுகளில் சேரப் பதிவு செய்த ஒரு தனிநபர், அந்தப் படைப் பிரிவுக்குள்ளேயே கண்டிப்பாக இருப்பார்" என்றார்.
இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு பல்கலைக்கழக ஊழியர்களிடம் இருந்து அழுத்தம் வந்தால், மாணவர்கள் அழைக்கக்கூடிய ஒரு உதவி எண்ணை (Hotline) அமைப்பதாக ரஷ்யாவின் உயர் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், உக்ரைனுக்கு எதிரான போரில் உயிரிழப்புகள் உயர்ந்து வருவதனால், புதிய ஆட்சேர்ப்பு ஆதாரமாக ரஷ்யா பல்கலைக்கழகங்களை அதிகளவில் நாடியுள்ளதாக கூறப்படுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |