நெப்போலியனுக்கும் ஹிட்லருக்கும் ஏற்பட்ட நிலை புடினுக்கும்: புதிய சவாலை சந்திக்கும் ரஷ்ய படைகள்
உக்ரைன் மீது இரண்டு வாரங்கள் கடந்தும் தொடர்ந்து தாக்குதலை முன்னெடுத்துவரும் ரஷ்ய துருப்புகளை புதிய சவால் ஒன்று திணறடித்து வருகிறது.
இன்னும் 3 வாரங்கள் வரையில் இதே நிலை நீடிக்கும் என்பதால், ரஷ்ய ஜனாதிபதி புடின் சுதாரித்துக் கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்து 17 நாட்கள் கடந்துள்ளது. ரஷ்ய துருப்புகள் திட்டமிட்டபடியே தலைநகர் கீவ்வை கைப்பற்ற முன்னேறி வருகின்றனர். தற்போது தலைநகரில் இருந்து 15 மைல்கள் தொலைவில் ரஷ்ய துருப்புகள் நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், ரஷ்யாவின் வான்படை மற்றும் இராணுவம் இடையே போதுமான ஒத்துழைப்பு இல்லாதது அவர்கள் பின்னடைவுக்கு முதன்மை காரணமாக கூறப்படுகிறது.
இதே வேளை, உக்ரைன் தொடர்பில் முழுமையாக தெரிந்துகொள்ளாமல் புடின் முடிவெடுத்துள்ளதாகவும், நெப்போலியன், ஹிட்லர் ஆகியோருக்கு நேர்ந்த அதே நிலைதான் தற்போது புடினுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் தரப்பில் விமர்சிக்கப்படுகின்றது.
உக்ரைனில் தற்போது நிலவும் Rasputitsa என்ற பருவநிலை தற்போது உக்ரைனை காத்து வருவதாக கூறுகின்றனர். Rasputitsa பருவநிலை காரணமாக ஏற்படும் அதிக மழை மற்றும் பனி சாலை போக்குவரத்தை மிகுந்த கடினமாக்குகிறது.
இந்த சூழலில், தற்போது ரஷ்ய துருப்புகள் மற்றும் டாங்கிகள் முன்னேற முடியாமல் திணறி வருகின்றன. குறிப்பிட்ட பகுதிகளில் டாங்கிகளை விட்டுவிட்டு ரஷ்ய வீரர்கள் நடந்தே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது ரஷ்ய துருப்புகள் உக்ரைனில் எதிர்கொள்ளும் புதிய சவாலாக பார்க்கப்படுகிறது. மட்டுமின்றி இது திட்டமிடலின் மிகப்பெரிய சறுக்கலாகவும் பார்க்கப்படுகிறது. மட்டுமின்றி உக்ரைனில் ரஷ்ய துருப்புகளுக்கு தேவையான எரிசக்தி மற்றும் உணவு, தண்ணீருக்கும் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
Rasputitsa பருவநிலையானது இன்னும் சுமார் 3 வாரங்களுக்கு நீடிக்கும் என்பதால், ரஷ்ய துருப்புகள் சமாளிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த 1812ல் நெப்போலியனின் படைகள் பின்வாங்கவும், பின்னர் ஹிட்லரின் நாஜி படைகள் உக்ரைன் ஊடாக தலைநகர் மாஸ்க்கோவுக்கு செல்ல திட்டமிட்டு, 1943ல் ரஷ்யாவிடம் வீழ்ந்ததற்கும் இந்த மோசமான வானிலை தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.