பெரும் சிக்கலில் ட்ரம்ப்... ரோந்து பணியில் கூட்டாக பயணித்த ரஷ்ய, சீன நீர்மூழ்கிக் கப்பல்கள்
ரஷ்யா மற்றும் சீனாவின் கடற்படைகள் கூட்டுப் பயிற்சிகளை நடத்தியுள்ளது ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாகவே பார்க்கப்படுகிறது.
ட்ரம்பிற்கு எச்சரிக்கை
ரஷ்ய கடற்படையின் பசிபிக் பிரிவின், அதன் நீர்மூழ்கிக் கப்பல்கள், சீனாவுடன் சேர்ந்து, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் கூட்டு ரோந்துப் பணிகளை மேற்கொண்டுள்ளது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தக் கூடும் என்றே கூறுகின்றனர்.
மிக முக்கியமாக, இந்தப் பகுதியில் இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ளும் முதல் நீர்மூழ்கிக் கப்பல் ரோந்துப் பணி இது என்றே கூறப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் தொடங்கிய ரோந்துப் பணியில் டீசல்-மின்சார நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ரஷ்யா மற்றும் சீனாவின் சமீபத்திய இந்த நடவடிக்கை, ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையே வளர்ந்து வரும் இராணுவ ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகவும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு ஒரு மறைமுக எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
மேலும் வலுப்படுத்தும்
ஆனால், ரஷ்ய கடற்படை இந்த நடவடிக்கையை இருதரப்பு பயிற்சிகளின் தொடர்ச்சியான திட்டத்தின் ஒரு பகுதியாகவே குறிப்பிட்டுள்ளது. மட்டுமின்றி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் தனிப்பட்ட முறையில் நல்ல உறவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள், இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ரஷ்ய - சீன கடற்படையின் கூட்டுப் பயிற்சி என்பது இது முதல் முறை அல்ல. முன்னர் இதுபோன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது கடற்படை கப்பல்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.
இந்த ரோந்துப் பணியில் முதல் முறையாக, ரஷ்ய மற்றும் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒன்றாக ஈடுபடுத்தப்பட்டன. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், இரு நாடுகளின் கடற்படைகளும் நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு நடவடிக்கையை உருவகப்படுத்தும் இருதரப்புப் பயிற்சியை மேற்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |