தலைநகரை குறிவைத்த உக்ரைன்! ஒரே இரவில் 193 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திவிட்டோம் - ரஷ்யா
ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் 193 ட்ரோன்களை ஒரே இரவில் சுட்டு வீழ்த்திவிட்டதாக தெரிவித்துள்ளது.
எரிசக்தி கட்டமைப்புகள்
உக்ரைன் மீதான அதன் முழு அளவிலான படையெடுப்பை நடத்தும் ரஷ்யா, ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. 
இதில் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் குறிப்பிடத்தக்கவை. இதற்கு பதிலடியாக உக்ரைனும் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பிற எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்த வகையில் ரஷ்யா மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மூலம் உக்ரைன் இரவுநேர தாக்குதலை நடத்தியுள்ளது.
ஆனால், அதனை தங்களது படைகள் சுட்டு வீழ்த்தி முறியடித்து விட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒருவர் பலி
உக்ரைனின் 193 ட்ரோன்களை ஒரே இரவில் சுட்டு வீழ்த்தியதாகவும், இதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரையன்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநர் அலெக்சாண்டர் போகோமாஸ், போகர் கிராமத்தில் ஒரு மினிபஸ் மோதியதில் ஓட்டுநர் கொல்லப்பட்டதாகவும், ஐந்து பயணிகள் காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.
ரஷ்யப் படைகள் பிரையன்ஸ்கில் மொத்தம் 47 ட்ரோன்களையும், மாஸ்கோ பிராந்தியத்தில் 40 ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தின என்றும், அவற்றில் பெரும்பாலானவை தலைநகரை நோக்கி சென்றதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |