வணிக வளாகத்தின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்: நால்வர் உயிரிழப்பு
உக்ரைனின் வணிக வளாகத்தை குறிவைத்து ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
வணிக வளாகம் மீது ட்ரோன் தாக்குதல்
உக்ரைனின் ட்னிப்ரோபெட்ரோவ்ஸ்க்(Dnipropetrovsk) பிராந்தியத்தின் பாவ்லோஹ்ராட்(Pavlohrad) நகரில் அமைந்துள்ள வணிக வளாகத்தை குறிவைத்து ரஷ்யா ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டதுடன், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பகல் நேரத்தில் மக்கள் அதிக அளவு நடமாடும் இடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக உக்ரைனின் உள்துறை அமைச்சர் இவான் விஹிவ்ஸ்கி தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் அப்பகுதியில் உள்ள கடைகளும், வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
உக்ரைன் அவசரகால சேவையினர் வெளியிட்ட காட்சிகளில், தீயணைப்பு துறையினர் அடர் புகைக்கு மத்தியில் தீப்பற்றி எரியும் வாகனங்களை அணைப்பதை பார்க்க முடிகிறது.
ஜெலென்ஸ்கி கண்டனம்
ரஷ்யாவின் இந்த அத்துமீறிய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வணிக வளாகத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீது ரஷ்யா திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையில் ரஷ்யாவின் சோச்சி நகரில் உள்ள சுற்றுலாத் தலத்தில் உக்ரைனின் கடல்சார் ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் காயமடைந்ததுடன் 3 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |