உக்ரைனில் பயணிகள் ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: 11 வயது சிறுவன் உட்பட 14 பேர் பலி
russian drones attacks railway hub in Dnipro leaves 14 dead: உக்ரைனின் டினிப்ரோ ரயில் நிலையத்தில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
ரயில் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்
உக்ரைனின் டினிப்ரோ(Dnipro) நகரத்தின் முக்கிய ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 11 வயது சிறுவன் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் மேலும் 14 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சபோரிஷியா நகருக்கு பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த ரயிலை குறிவைத்து இந்த தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை உக்ரைனின் தேசிய ரயில் சேவை நிறுவனமான Ukrzaliznytsia உறுதிப்படுத்தியுள்ளது.

வியாழக்கிழமை தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதாகவே ரஷ்யாவின் வான்வழி தாக்குதல் தொடர்பான ஆபத்து எச்சரிக்கையை ரயில்வே நிர்வாகம் தெரிவித்து இருந்ததாக ரயில்வே நிறுவனத் தலைவர் ஒலெக்சாண்டர் பெர்ட்சோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் இந்த தாக்குதலின் போது ரயில்வே பிளாட்ஃபாரத்தில் பொதுமக்கள் அதிகளவு கூடியிருந்ததே பாதிப்பு அதிகரித்ததற்கான முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.
உக்ரைனில் பயணிகள் ரயில் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து ரஷ்ய ராணுவம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ கருத்துகளையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.