ரஷ்ய பேரரசு... போர்த்துகல் வரையில் ஆட்சி: விளாடிமிர் புடினின் கனவுத் திட்டம்
ரஷ்யா முதல் போர்த்துகல் வரையான ஒரு பேரரசை நிறுவவே விளாடிமிர் புடின் திட்டமிட்டு வருவதாக ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி Dmitry Medvedev எச்சரித்துள்ளார்.
தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைனில் பாரிய இராணுவத் தாக்குதலை ரஷ்யா திட்டமிடுகிறது என்ற மேற்கத்திய நாடுகளின் அச்சங்களுக்கு மத்தியில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விளாடிமிர் புடினின் ஆதரவாளரும் பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவருமான Dmitry Medvedev மேலும் குறிப்பிடுகையில், உக்ரைனில் அமைதியை நிலைநாட்டவே ரஷ்யா முயன்று வருவதாகவும், சிறப்பு இராணுவ நடவடிக்கையை மக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், உக்ரைனில் நாஜிக்கள், கொலைகாரர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும், அமைதியின்மை மேலோங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரேனியர்களின் எதிர்கால சந்ததியினரின் அமைதிக்காகவும், லிஸ்பன் முதல் விளாடிவோஸ்டாக் வரை அனைவருக்குமான யூரேசியாவை உருவாக்குவதற்கான வாய்ப்பிற்காகவும் தற்போது சிறப்பு இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக Dmitry Medvedev சுட்டிக்காட்டியுள்ளார்.
பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த நிலையில், ரஷ்ய மக்களுக்கு Dmitry Medvedev அளித்த இந்த விளக்கம் முக்கிய ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது.
ஆனால், பனிப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஐரோப்பாவின் பாதுகாப்பு கட்டமைப்பை மீண்டும் திருத்த புடின் மேற்கொண்ட முயற்சியாகவே உக்ரைன் மீதான படையெடுப்பை மேற்கத்திய நிபுணர்கள் தரப்பு கருதுகின்றனர்.
மட்டுமின்றி, உக்ரைன் அளித்த பதில் தாக்குதல் விளாடிமிர் புடினின் மனக்கணக்கை ஆட்டம் காண வைத்துள்ளது எனவும் கூறுகின்றனர். புச்சா பகுதியில் ரஷ்ய துருப்புகளின் காட்டுமிராண்டித்தனம், உண்மையில் இந்த படையெடுப்பு அமைதியை நிலைநாட்ட அல்ல, இன அழிப்புக்கான முயற்சி எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனிடையே, ரஷ்ய துருப்புகளை ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி. மட்டுமின்றி, உக்ரைனில் புடின் இராணுவம் முன்னெடுத்த அட்டூழியங்களுக்காக நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.