புடினுடன் தொடர்பு..ரஷ்ய கார்பந்தய வீரரின் 100 மில்லியன் யூரோ மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!
ரஷ்ய கார்பந்தய வீரர் நிகிதா மெஸ்ப்பினுடைய 100 மில்லியன் யூரோ மதிப்பிலான சொத்துக்களை இத்தாலி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ரஷ்யாவின் ஹாஸ் பார்முலா 1 கார் பந்தய வீரர் நிகிதா மெஸ்ப்பின். இவருடைய தந்தை டிமிட்ரி மெஸ்ப்பின், உரால்கெம் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மிகப்பெரிய கனிம உர நிறுவனமான இது, ரஷ்ய பொருளாதாரத்திற்கு கணிசமான அளவு வருவாயை வழங்குகிறது.
உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு டிமிட்ரி மெஸ்ப்பின் ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்த புகைப்படம் எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உக்ரைனில் நடந்த நிகழ்வுகள் மற்றும் பொருளாதாரத்தின் நிலைமை குறித்து விவாதிக்க கூடியிருந்த தொழிலதிபர் மற்றும் சக்திவாய்ந்த ரஷ்ய நபர்களின் ஜனாதிபதியின் கூட்டத்தில் டிமிட்ரி கலந்து கொண்டிருந்தார்.
இதன் மூலம் டிமிட்ரிக்கு ரஷ்ய ஜனாபதி புடினுடன் நெருங்கிய தொடர்பு இருந்திருந்தது உறுதியானது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பிறகு, டிமிட்ரியின் மகன் நிகிதா மெஸ்ப்பின் ஹாஸ் பார்முலா 1 அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், இத்தாலியின் சர்டினியாவின் வடகிழக்கு கடற்கரையில் உள்ள நிகிதா மெஸ்ப்பினுக்கு சொந்தமான சொகுசு வில்லாவை இத்தாலிய நிதிப் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். இது பணக்கார ரஷ்யர்களின் விளையாட்டு மைதானமாக இருந்துள்ளது. இதன் மதிப்பு 100 மில்லியன் யூரோக்கள் என தெரிய வந்துள்ளது.
ராக்கி ராம் என்று அழைக்கப்படும் இந்த வில்லா, கடந்த 2012ஆம் ஆண்டு இத்தாலிய செய்தித்தாள் ஆசிரியரிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது. இதில் 25 அறைகள் மற்றும் அழகாக செதுக்கப்பட்ட தோட்டங்கள் உள்ளன. மேலும் சிறுநீரக வடிவ நீச்சல் குளம் ஒன்றும் இதில் உள்ளது.
முன்னதாக, ரஷ்யப் படைகள் உக்ரைனில் செய்த வெளிப்படையான அட்டூழியங்களைப் பற்றி கேட்டபோது, நிகிதா மெஸ்ப்பின் தனது நிலைப்பாட்டை தனிப்பட்ட முறையில் வைத்திருக்க விரும்புவதாகக் கூறியிருந்தார்.
விளாடிமிர் புடினின் உள் வட்டத்தைச் சேர்ந்த தன்னலக்குழுக்கள் மற்றும் தனிநபர்களை தண்டிக்க, இத்தாலிய அதிகாரிகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.