ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை தாக்கிய ரஷ்ய படைகள்: அணு உலையில் தீப்பற்றியதால் பரபரப்பு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தான் கண்ணாடி வீட்டிலிருந்துகொண்டு கல் எறிவதை புரிந்துகொள்ளவில்லையா என்று தெரியவில்லை.
ஆம், ரஷ்ய படைகள் உக்ரைன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அணுமின் நிலையம் ஒன்று தாக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள Zaporizhzhia என்ற இடத்தில் அணு மின் நிலையம் ஒன்று உள்ளது. அதில் ஆறு அணு உலைகள் உள்ளன. உக்ரைனின் மின் உற்பத்தியில் 25 சதவிகிதம் அங்குதான் நடைபெறுகிறது. ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அந்த அணு மின் நிலையம் தற்போது ரஷ்ய படைகளால் தாக்கப்பட்டு, திகிலை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய படைகள் டாங்குகள் மூலம் கட்டிடங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்த அணு மின் நிலையமும் தாக்குதலுக்குள்ளாகி, அதிலுள்ள அணு உலை ஒன்றில் தீப்பற்றியுள்ளது.
ஒரு பக்கம், அந்த அணு உலை புதுப்பித்தலுக்காக மூடப்பட்டதால் அது தீப்பற்றியதால் பெரிய பிரச்சினை ஏற்படாது என கூறப்பட்டாலும், அதினுள் இன்னமும் அணு எரிபொருள் இருப்பதால், முற்றிலும் அபாயம் இல்லை என்றும் கூறிவிடமுடியாது.
இந்நிலையில், ரஷ்ய படைகள் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருவதால், தீயை அணைப்பதற்காக தீயணைக்கும் படையினரால் அங்கு செல்ல முடியவில்லை என்று அந்த அணு மின் நிலைய செய்தித்தொடர்பாளரான Andriy Tuz தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், உக்ரைன் வெளிவிவகாரங்கள் துறை அமைச்சரான Dmytro Kuleba, ரஷ்ய படைகள் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு முன் நிலையம் மீது தாக்குதல் நடத்து வருவதாகவும், ஏற்கனவே அங்கு தீப்பற்றிவிட்டது என்றும், அந்த அணு உலை வெடிக்குமானால், அது செர்னோபில் அணு உலை வெடிப்பை விட 10 மடங்கு பெரியதாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஆகவே, ரஷ்யப் படைகள் உடனடியாக தாக்குதலை நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் அவர்.
உக்ரைனுக்கு வடக்கே அமைந்துள்ள செர்னோபில் நகரில் அமைக்கப்பட்டிருந்த அணு மின் நிலையத்திலுள்ள அணு உலை ஒன்று 1986ஆம் ஆண்டு வெடித்ததில், உடனடியாக 30 பேர் உயிரிழந்ததுடன், அந்த அணுக்கரு வீச்சின் பாதிப்பினால் சுமார் 2,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றில் மிக மோசமான அந்த அணு உலை வெடிப்பை சந்தித்த பிறகும் ரஷ்ய அதிபர் புடின் அணு மின் நிலையம் மீது தாக்குதலை நடத்தியிருப்பதைப் பார்த்தால், அந்த அணு உலை வெடித்தால் தன் படை வீரர்களும்தான் கொல்லப்படுவார்கள் என்பதை அவர் உணரவில்லையா என கேள்வி எழுகிறது!