இறுதி மூச்சு வரை...ரஷ்யாவுக்கு பகிரங்க சவால் விடுத்த உக்ரேனிய வீரர்கள்
உக்ரைனின் மரியுபோல் நகரில் தாங்கள் உயிருடன் எஞ்சும் வரையில் விளாடிமிர் புடினின் கனவு பலிக்காது என உக்ரைன் வீரர்கள் பகிரங்க சவால் விடுத்துள்ளனர்.
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் ரஷ்ய துருப்புகளின் பிடியில் சிக்கியுள்ளதாகவும், Azovstal இரும்பு தொழிற்சாலையில் மட்டும் சில நூறு உக்ரைனிய வீரர்களும் அப்பாவி பொதுமக்களும் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், குறித்த தகவல் உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிரடி தாக்குதல் எதுவும் முன்னெடுக்க வேண்டாம் என விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளதாகவும், ஆனால் உக்ரைனிய துருப்புகளை சரணடைய வாய்ப்பு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், உக்ரைனிய வீரர்கள் விளாடிமிர் புடினின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ள நிலையில், Azovstal தொழிற்சாலையை மொத்தமாக மூடிவிட புடின் உத்தரவிட்டுள்ளதாகவும், அங்கிருந்து எவரும் வெளியேறாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது பதுங்கியுள்ள அப்பாவி மக்கள் மற்றும் உக்ரைன் வீரர்களின் மரணத்திற்கு வழி வகுக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
மரியுபோல் சுற்றுவட்டாரப்பகுதியில் மட்டும் 9,000 அப்பாவி உக்ரேனிய மக்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும், செயற்கைக்கோள் படங்களால் குறித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையிலேயே, உக்ரைன் ராணுவத்தினர் காணொளி ஒன்றை வெளியிட்டு, ரஷ்யாவுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளனர். அதில், Captain Svyatoslav Palamar குறிப்பிடுகையில், மரியுபோல் நகரில் தாங்கள் எஞ்சியிருக்கும் வரையில், மரியுபோல் நகரம் கண்டிப்பாக உக்ரைன் வசமே இருக்கும் எனவும், ரஷ்யாவின் பொய் பரப்புரைகளு பதிலடி அளிப்போம் எனவும் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
இதனிடையே, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும் மரியுபோல் நகர வீரர்கள் குறிப்பிட்ட அதே கருத்தையே பதிவு செய்துள்ளார். மேலும், குறித்த தொழிற்சாலையில் பதுங்கியுள்ள உக்ரேனிய வீரர்களில் சுமார் 500 வீரர்கள் காயங்களுடன் அவதிப்படுவதாகவும், போதுமான மருத்துவ உதவிகள் தேவை எனவும் உணவு பற்றாக்குறை கடுமையாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.