பொதுமக்களை சரமாரியாக கொன்று குவிக்கும் ரஷ்யப் படைகள்: வெளியாகியுள்ள மனம் பதறவைக்கும் காட்சிகள்
ஈஸ்டர் தினத்தன்று உக்ரைன் நகரமொன்றில் ரஷ்யப் படைகளால் கொன்று குவிக்கப்பட்டுள்ள பொதுமக்களைக் காட்டும் காட்சிகள் வெளியாகி மனதைப் பதறவைத்துள்ளன.
Kharkiv நகர் மீது, ஈஸ்டர் தினத்தன்று சரமாரியான தாக்குதல் நடத்தியுள்ளனர் ரஷ்யப் படையினர்.
அது குறித்த வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், ஒரு வீடியோவில், திடீரென ரஷ்யப் படைகள் தாக்க, சிலர் பலியான நிலையில், ஒரு பெண்ணுக்கு காலில் பலத்த காயம் பட்டுள்ளது.
அப்போது Kharkiv நகர செஞ்சிலுவைச் சங்கத்தில் தன்னார்வலராக இருக்கும் Denys Petrenko என்பவர் அந்தப் பெண்ணுக்கு முதலுதவி அளித்துக்கொண்டிருக்கிறார்.
அதற்குள் ரஷ்யப் படைகள் மீண்டும் தாக்குதலைத் தொடங்க, மற்ற தன்னார்வலர்களும் உக்ரைன் போர் வீரர்களும் தப்புவதற்காக ஒரு கட்டிடத்துக்குள் ஓடி மறைந்துகொள்ள, Petrenkoவோ, அந்தப் பெண்ணைத் தனியாக விட்டுச் செல்ல மனமில்லாமல், அவர் மீது குண்டு பாய்ந்துவிடக்கூடாது என்பதற்காக தன் உடலையே கேடயமாக்கி அந்தப் பெண்ணை மறைத்துக் கொள்ளும் காட்சியை வீடியோ ஒன்றில் காணலாம்.
அடுத்த வீடியோவோ பயங்கரமானது. ஆங்காங்கு ரஷ்யப் படையினரின் தாக்குதலில் பொதுமக்கள் இரத்த வெள்ளத்தில் காயமடைந்தும் இறந்தும் கிடக்க, தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடக்க, ஒருவர் கட்டிடம் ஒன்றிற்குள் சற்றே மறைந்து நிற்கிறார்.
அவர் நிற்கும் கட்டிடத்தின் முன் பகுதியில் ஒரு இளம்பெண்ணின் உடல் கிடக்கிறது. நீங்கள் ஏன் இங்கு நிற்கிறீர்கள் என அவரிடம் அங்கு நிற்கும் மற்றொருவர் கேட்க, அதோ என மகள் இறந்து கிடக்கிறாள் என அவர் கூறுவதைக் கேட்க மனம் திக் என்கிறது.
என் மகள் கொல்லப்பட்டுவிட்டதாக எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, இங்கு வந்து பார்த்தால் அவள் இறந்து கிடக்கிறாள் என்கிறார் அந்தத் தந்தை.
அந்தக் காட்சிகளைக் கண்டால் கல் மனதும் கரைந்து போகும். அவ்வளவு பயங்கரமாக உள்ளன அவை.
மழை வேறு பெய்ய, ஆங்காங்கே சாலையில் உண்மையாகவே இரத்தம் ஆறாக ஓட, மனம் பதறுகிறது.
ஐயோ, இந்தப் போர் முடிந்துவிடாதா என மனது ஓலமிடுகிறது!