பல மாதங்களாகலாம்... உயிருடன் தப்பிவிடுங்கள்: உக்ரைன் மக்களுக்கு நேட்டோ எச்சரிக்கை
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு முடிவுக்கு வர பல மாதங்களாகலாம் எனவும், மொத்த நாட்டையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முடிவில் இருந்து விளாடிமிர் புடின் விலக வாய்ப்பில்லை எனவும் நேட்டோ தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷ்ய துருப்புகள் குவிக்கப்பட்டுவரும் நிலையில், அப்பகுதி பொதுமக்களுக்கு உக்ரைன் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உயிரபாயம் இருப்பதால், கண்டிப்பாக அப்பகுதி மக்கள் வெளியேற வேண்டும் எனவும், ரஷ்ய துருப்புகள் எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை முன்னெடுக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்த நிலையிலேயே, சர்வதேச சமூகம் இனியேனும் ரஷ்யா தொடர்பில் யதார்த்தமாக நடந்து கொள்ள வேண்டும் என நேட்டோ தலைவர் Jens Stoltenberg அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு முடிவுக்கு வர பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம் என குறிப்பிட்டுள்ள அவர், உக்ரைனை ஆதரிப்பது, பொருளாதாரத் தடைகளை நிலைநிறுத்துவது மற்றும் நமது பாதுகாப்பை வலுப்படுத்துவது போன்ற விடயங்களில் நீண்ட காலத்திற்கு நாம் தயாராக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உக்ரைனுக்கான ஆயுத உதவிகளை மேலும் அதிகரிக்க உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, உக்ரைன் துணைப் பிரதமர் Iryna Vereshchuk வெளியிட்ட சமூக ஊடக பதிவு ஒன்றில், நாட்டின் கிழக்குப் பிராந்தியங்களில் வசிப்பவர்கள் உடனையே வெளியேற வேண்டும், அல்லது ரஷ்ய தாக்குதலில் சிக்கும் அபாயம் உள்ளது என எச்சரிக்கை விடுத்திருந்தார்.