குண்டு மழை பொழிந்த ரஷ்ய போர் விமானங்கள்.. முக்கிய நகரை உலுக்கிய தாக்குதல்! ஐ.நா அதிகாரி வேதனை
சிரியாவின் இட்லிப் நகரில் ரஷ்ய போர் விமானங்கள் சரமாரியாக குண்டு போட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல் குறித்து கண்காணிப்பு மையம் அளித்த தகவலின் படி, ரஷ்ய சுகோய் ஜெட் விமானங்கள், சிரியாவின் இட்லிப் நகரம் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இத்தாக்குதலில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இட்லிப் நகரத்திற்கு தண்ணீர் விநியோகிக்கும் முக்கிய நீர் நிலையம் சேதமடைந்துள்ளது என கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதல் தொடர்பாக தற்போது வரை ரஷ்யா மற்றும் சிரியா இராணுவம் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.
எனினும், குறித்த பகுதிகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் போராளி குழுக்கள் பதுங்கியிருக்கும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், பொதுமக்கள் மீது எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை என தெரிவித்துள்ளன.
தாக்குதலின் விளைவாக இட்லிப் நீர் நிலையம் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சம்மந்தப்பட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய நடத்திய வான்வழி தாக்குதலில் நீர் நிலையம் மோசமாக சேதமடைந்ததை உறுதிப்படுத்திய மூத்த ஐ.நா அதிகாரி, இத்தகைய தாக்குதல்கள் மில்லியன் கணக்கான இடம்பெயர்ந்த சிரியர்களின் மனிதாபிமான அவலநிலையை இன்னும் மோசமாக்குவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
சிரியாவின் உள்கட்டமைப்பை தொடர்ந்து அழிப்பது பொதுமக்களுக்கு அதிக துன்பத்தை ஏற்படுத்தும்.
பொதுமக்கள் மற்றும் குடிமக்கள் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.வின் பிராந்திய மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் மார்க் கட்ஸ் தெரிவித்துள்ளார்.