40 மைல் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் ரஷ்ய ராணுவம்: அதிர்ச்சி தரும் புதிய செயற்கைகோள் புகைப்படங்கள்
உக்ரைனின் தலைநகர் கிளிவ்வை இன்று கைப்பற்றும் முனைப்பில், ரஷ்யா தனது ராணுவ துருப்புகளை சுமார் 40 மைல் தொலைவிற்கு அணிவகுக்க வைத்துள்ளது தொடர்பான செயற்கைகோள் புகைப்படம் வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்க்கிவ்வை ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நிலையில், தற்போது உக்ரைனின் தலைநகர் கிளிவ்வையும் கைப்பற்றும் நடவடிக்கையில் ரஷ்யா இறங்கியுள்ளது.
அமெரிக்காவின் Maxar டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள இந்த செயற்கைகோள் புகைப்படத்தில், ரஷ்யா தனது ராணுவ துருப்புகளை உக்ரைனின் தலைநகர் கிளிவ்வின் வடக்கே சுமார் 40 மைல் (64 கிலோமீட்டர்) தூரத்திற்கு அணிவகுத்து நிற்க வைத்து இருப்பது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.
மேலும் ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸின் வடக்கு பகுதியில் கூடுதல் தரைப்படை வீரர்களையும், தரை தாக்குதல் ஹெலிகாப்டர்களையும் தயார் நிலையில் வைத்து இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த 40 மைல் ராணுவ துருப்புகளின் அணிவகுப்பானது, கடந்த முறை நடத்தப்பட்ட 17 மைல் ராணுவ துருப்புகளின் அணிவகுப்பை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.





