கால்பந்து போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு.,மைதானத்தை தாக்கிய ரஷ்ய ஏவுகணை
ஓடேசா கால்பந்து மைதானம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
கால்பந்து மைதானம் மீது ரஷ்யா தாக்குதல்
உக்ரைனின் ஓடேசா(Odesa) நகரில் அமைந்துள்ள செர்னோமோரெட்ஸ் மைதானம்(Chornomorets Stadium) மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
மைதானத்தில் உக்ரைன் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ரஷ்யா இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.

இதில் குறைந்தது ஒருவர் காயமடைந்து இருப்பதுடன், மைதானம் பலத்த சேதம் அடைந்துள்ளது.
மைதானத்தில் ஏற்பட்டுள்ள சேதம்
34,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய செர்னோமோரெட்ஸ் மைதானத்தின் கூரை பெருமளவு சேதமடைந்துள்ளது.
மைதானத்தில் உள்ள கண்ணாடிகள் மற்றும் பார்வையாளர்கள் மாடங்கள் பலத்த சேதமடைந்து இருப்பதாக அவசரகால சேவைப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் சிதறிய வெடிகுண்டு சில்லுகளால் 29 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்து இருப்பதை ஓடேசா ஆளுநர் ஒலெக் கிப்பர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்காக உள்ளூர் அதிகாரிகளும், அவசர கால மீட்பு படையினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
போட்டிகள் ஒத்திவைக்கப்படுமா?
செர்னோமோரெட்ஸ் மைதானத்தில் நாளை உக்ரைன் பிரீமியர் லீக்கின் இரண்டாவது சுற்று ஆட்டம் நடைபெற இருந்தது.
நாளை மதியம் 1 மணிக்கு இந்த மைதானத்தில் செர்னோமோரெட்ஸ் மற்றும் கோலோஸ் அணிகள் மோத இருந்தன.
இந்த தாக்குதலை அடுத்து இந்த போட்டி ஒத்திவைக்கப்படுமா? அல்லது வேறு இடத்திற்கு மாற்றப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்று இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |