போலந்தில் விழுந்த ரஷ்ய ஏவுகணைகள் - ஐரோப்பாவில் பதற்றத்தை அதிகரித்துள்ள உக்ரைன் போர்
Russian Missiles Strike Poland During Ukraine War: உக்ரைனுக்கு எதிரான தாக்குதல்களின் போது ரஷ்ய ஏவுகணைகள் போலந்தின் விழுந்துள்ளன.
போலந்தின் எல்லைக்குள் விழுந்த ரஷ்ய ஏவுகணைகள்
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான் தாக்குதலின்போது, இரண்டு ரஷ்ய க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஒரு ஜெட் இயக்க ட்ரோன் அண்டை நாடான போலந்தின் எல்லைக்குள் நுழைந்து விழுந்த சம்பவம் ஐரோப்பிய நாடுகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை போலந்து அரசு "ரஷ்யாவின் திட்டமிட்ட தூண்டுதல் நடவடிக்கை" என்று குற்றம் சாட்டியுள்ளது.

இராணுவப் பயிற்சி நேரத்தில்
நேட்டோ கூட்டணியில் உறுப்பினரான போலந்தின் தென்கிழக்குப் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதே நேரத்தில், 11 நாடுகளைச் சேர்ந்த படைகள் பங்கேற்ற முக்கிய இராணுவப் பயிற்சி நிகழ்ச்சி அப்பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் இந்த ஊடுருவல் சாதாரண விபத்து அல்ல என்று போலந்து அதிகாரிகள் கருதுகின்றனர்.
தற்செயலானது அல்ல
போலந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் Władysław Kosiniak-Kamysz, நாட்டின் வான்வெளி 3 முறை மீறப்பட்டதாக உறுதி செய்தார். இருப்பினும் உயிரிழப்புகளோ காயங்களோ பதிவாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த போலந்து பிரதமர் Donald Tusk, "இது ஒரு திட்டமிட்ட தூண்டுதல் நடவடிக்கை போல தெரிகிறது" என்று கூறினார். மேலும், நேட்டோ பொதுச்செயலாளர் Mark Rutte உடன் பேசியதாகவும், இந்த சம்பவம் இராணுவப் பயிற்சிக்கு முந்தைய இரவில் நடந்தது தற்செயலானது அல்ல என்ற கருத்தில் இருவரும் ஒத்துப்போனதாகவும் தெரிவித்தார்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இது 2022-ம் ஆண்டு தொடங்கிய முழுமையான போருக்குப் பிறகு நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாகும் என்று கூறினார். இந்த தாக்குதலில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டமைப்புகளே முக்கியமாக குறிவைக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். நேட்டோ அமைப்பும் இந்த சம்பவத்தை மிகவும் கவலைக்குரியதாக விவரித்துள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து நேட்டோ போர் விமானங்கள் அவசரமாக இயக்கப்பட்டதாக Mark Rutte தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் நடவடிக்கைகள் ஐரோப்பிய பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக மாறிவருவதாகவும் அவர் எச்சரித்தார்.
இந்த சம்பவம், ரஷ்யா - உக்ரைன் போர் எல்லைகளைத் தாண்டி அண்டை நாடுகளின் பாதுகாப்பையும் பாதிக்கத் தொடங்கியிருப்பதை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக நேட்டோ உறுப்பினர் நாட்டின் வான்வெளி மீறப்பட்டுள்ளதால், ஐரோப்பிய பாதுகாப்பு சூழலில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |