உக்ரைனிய மக்களுக்கு வழங்கப்படும் ரஷ்ய பாஸ்போர்ட்கள்: உச்சத்தை தொட்ட புடினின் அத்துமீறல்!
தெற்கு உக்ரைனில் ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கெர்சன் மற்றும் மெலிடோபோல் ஆகிய இரண்டு நகரங்களில் வசிக்கும் உள்ளூர் பொதுமக்களுக்கு ரஷ்ய பாஸ்போர்ட்களை ரஷ்ய அதிகாரிகள் வழங்க தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீதான போர் தாக்குதலில் ரஷ்யா பெரும்பாலான தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைனிய நகரங்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து இருக்கும் நிலையில், ரஷ்ய அதிகாரிகள் உக்ரைனின் கெர்சன் மற்றும் மெலிடோபோல் நகரங்களில் வசிக்கும் உள்ளூர் பொதுமக்களுக்கு ரஷ்ய பாஸ்போர்ட்களை வழங்க தொடங்கி இருப்பதாக தெரிவந்துள்ளது.
இதுத் தொடர்பாக ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் வெளியிட்ட தகவலில், சனிக்கிழமை நடைப்பெற்ற விழாவில் கெர்சன் நகரின் முதல் 23 நபர்களுக்கு ரஷ்ய பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் ரஷ்ய பாஸ்போர்ட்களுக்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விண்ணப்பித்து இருப்பதாகவும், ஆனால் அந்த கூற்றை சரிபார்க்க முடியாது எனவும் டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ரஷ்யாவால் நியமிக்கப்பட்டுள்ள கெர்சனின் ராணுவ ஆளுநர் வோலோடிமிர் சால்டோ, "எங்கள் கெர்சன் தோழர்கள் அனைவரும் ரஷ்ய பாஸ்போர்ட் மற்றும் ரஷ்ய குடியுரிமையை விரைவில் பெற விரும்புகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ரஷ்யாவின் இந்த பாஸ்போர்ட் வழங்குதலை வன்மையாக கண்டித்துள்ள உக்ரைன், இது உக்ரைன் இறையாண்மை மீது நடத்தப்பட்ட அப்பட்டமான மீறல் மற்றும் ஜனாதிபதி புடினின் இந்த ஆணை, சட்டப்படி செல்லாது எனத் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: துப்பாக்கி சட்டத்திற்கு எதிராக...பல்லாயிரக்கணக்கில் திரண்ட அமெரிக்கர்கள்!
கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷ்ய மேற்கொண்ட போர் நடவடிக்கையின் முலம் கிரிமியாவை முழுவதுமாக எடுத்துக்கொண்டது அப்போது அங்குள்ள மக்களுக்கு ரஷ்யா இது போன்ற பாஸ்போர்ட் வழங்கல் மற்றும் குடியுரிமை வழங்கல் போன்ற செயல்களில் ஈடுபட்டது, அதனை போன்றே தற்போது ரஷ்ய கட்டுப்பாட்டிற்குள் வந்து இருக்கும் பகுதிகளில் ரஷ்யா தங்களது பாஸ்போர்ட்களை வழங்க தொடங்கி இருப்பது உக்ரைனுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.