ரஷ்ய கைப்பாவை அவர்... உள்நாட்டுப் போர் உறுதி: பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் கடும் தாக்கு
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் பரப்புரைகளின் ஒருபகுதியாக ஊடக நேருக்குப் நேர் விவாதத்தில் தம்மை எதிர்த்து போட்டியிடும் மரைன் லீ பென்னை ரஷ்யாவின் கைப்பாவை என ஜனாதிபதி மேக்ரான் கடுமையாக சாடியுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதியாக மரைன் லீ பென் தெரிவானால், உள்நாட்டுப் போர் உறுதி எனவும் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கடுமையாக தாக்கியுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிவாய்ப்பு யாருக்கு என்ற கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானதில், ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு 59% ஆதரவும் அவரை எதிர்த்து போட்டியிடும் மரைன் லீ பென் 39% ஆதரவும் பெற்றுள்ளார்.
மட்டுமின்றி, இதுவரையான பரப்புரைகளில் ஜனாதிபதி மேக்ரானின் கை ஓங்கியிருப்பதாகவே அரசியல் நோக்கர்களும் குறிப்பிட்டுள்ளனர். இதனால், இமானுவல் மேக்ரான் இரண்டாவது முறையாக பிரான்ஸ் ஜனாதிபதி பொறுப்புக்கு வருவார் என்பது உறுதி என கூறுகின்றனர்.
மேலும், 53 வயதான மரைன் லீ பென்னை விடவும் 44 வயதான இமானுவல் மேக்ரான் உறுதியாக இருக்கிறார் எனவும் கருத்துக்கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையிலேயே மரைன் லீ பென் ரஷ்யாவின் பிடியில் சிக்கியுள்ளார் எனவும், பிரான்ஸ் தேர்தலுக்காக மரைன் லீ பென் ரஷ்யாவை பயன்படுத்துகிறார் எனவும் ஜனாதிபதி மேக்ரான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டுமின்றி, 2014ல் மரைன் லீ பென்னின் கட்சியானது ரஷ்யா வங்கி ஒன்றில் இருந்து சுமார் 8 மில்லியன் பவுண்டுகள் கடனாக பெற்றுள்ளது எனவும், இதுவரை கடனை திருப்பிச் செலுத்தவில்லை எனவும் மேக்ரான் அம்பலப்படுத்தியுள்ளார்.
ஆனால், பிரான்ஸ் வங்கிகள் எதுவும் தங்களுக்கு உதவ முன்வரவில்லை எனவும், வேறு வழியின்றியே ரஷ்ய வங்கியிடம் கடன் பெற்றதாக லீ பென் பதிலளித்துள்ளார்.
மேலும், இஸ்லாமிய பெண்கள் பொது இடங்களில் தலையில் ஸ்கார்ஃப் அணிவதற்கு தடை விதிக்க இருப்பதாகவும், அதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் லீ பென் கூறியுள்ள நிலையில், அவ்வாறான ஒரு முடிவு பிரான்ஸ் மண்ணில் உள்நாட்டுப் போரை ஏற்படுத்தும் என மேக்ரான் பதிலளித்துள்ளார்.
இதுவரையான கருத்துக்கணிப்புகளில் மேக்ரான் கை ஓங்கியிருந்தாலும், தேர்தல் முடிவுகள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட நெருக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.