உக்ரைனில் பணியாற்ற பதவியை ராஜினாமா செய்த ரஷ்ய செனட்டர்
ரஷ்யாவின் பெடரேஷன் கவுன்சில் செனட்டர் வைன்பெர்க் உக்ரைனில் பணியாற்றுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பெடரேஷன் கவுன்சில் செனட்டர்
ரஷ்யாவில் Lyube ராக் பிராண்ட் இசைக்குழுவில் கிட்டார் கலைஞராக இருந்தவர் அலெக்ஸாண்டர் வைன்பெர்க் (Alexander Vaynberg).
பின்னர் இவர் ரஷ்யாவின் மேலவையான பெடரேஷன் கவுன்சில் செனட்டர் ஆக பணியைத் தொடங்கினார்.
இந்த நிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள முன்னணிப் போர்க்களத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்காக 64 வயதாகும் வைன்பெர்க், தனது செனட்டர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
போர்க்களத்தில் பணியாற்ற
அவர் தனது ராஜினாமாவை முறைப்படி அங்கீகரிக்கும் வாக்கெடுப்பிற்குப் பிறகு, "கடந்த 15 ஆண்டுகளாக ஒரு குழுவாக உங்களுடன் பணியாற்றியது ஒரு பெருமையும், பாக்கியமும் ஆகும். நமது தாய்நாட்டிற்கு மேலும் சேவை செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். நமக்கு தெரிந்தபடி, வெற்றி நம்முடையதே" என்றார்.
முன்னணிப் போர்க்களத்தில் பணியாற்றுவதில் கவனம் செலுத்துவதற்காக வைன்பெர்க் ராஜினாமா செய்ததாக, பெடரேஷன் கவுன்சில் சபாநாயகர் வாலண்டினா மாட்வியென்கோ கூறியதாக கோமர்சண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், அவர் எந்த தகுதியில் பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடப்படவில்லை. முன்னதாக, வைன்பெர்க் பதவி விலகத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை மாலை முதன்முதலில் செய்தி வெளியிட்டன.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |